பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

இசையையும் அறிவதனால் எங்கட்கு ஏதும் பெரும் பயன் உண்டோ? என்றோ ஒருநாள் என் மனைவியின் வற்புறுத்தல் பொறுக்க முடியாமல் அவள் நோயாகக் கிடந்த துயரை மறக்கச் செய்வதற்காக ‘குட்முழா’ என்ற இசைக் கருவியை ஒரே ஒருமுறை வாசித்திருக்கிறேன். அதுதான் நான் முதன் முதலாக இசைக் கருவியைக் கையால் தொட்ட நாள்” என்று அழகாகத் தன் நடிப்புக்கு ஏற்ற வார்த்தைகளைப் புனைந்துரைத்தான். இதைக்கேட்ட பதுமை புன் சிரிப்பொன்றை உதிர்த்துக் கொண்டே யாப்பியாயினியின் காதிலே மட்டும் விழும்படியாக “அவ்வளவும் நடிப்பு. உண்மையில் இவர் ஒரு சுவைமிக்க கலைஞராக இருக்க வேண்டும். அதை இப்போதே சோதித்து அறிந்துவிடுவோம். நீ சென்று நான் வாசிக்கும் யாழை எடுத்துக்கொண்டு விரைவில் இங்கே வா!” என்றாள். உடனே தோழி விரைவாகச் சென்று பதுமையின் யாழோடு திரும்பி வந்தாள். யாழைப் பதுமையின் கைகளில் அளித்தாள்.

பதுமை யாழைத் தன் கையில் வாங்கி அதை வாசிக்க முயலுகின்றவள் போலச் சிறிது நேரம் நரம்புகளை மீட்டினாள். வேண்டுமென்றே நரம்புகளில் கெட்ட ஒசையைப் பிறக்குமாறு செய்து தான் அதை வாசிக்க ஆற்றாதவள் போலத் தோழியிடம் அளித்து உதயணன்பாற் கொண்டு சென்று அதனைச் செப்பஞ் செய்து வாங்கி வருமாறு குறிப்பாற் கூறினாள். அவன் இசைக் கலையில் நல்ல பழக்கம் உடையவன் என்பதை எவ்வகையிலாவது வெளிப் படச் செய்துவிட வேண்டும் என்பது பதுமையின் ஆசை. அந்த ஆர்வத் தூண்டுதலினாலேதான் பதுமை இவ்வாறு செய்தாள். யாப்பியாயினி மீண்டும் யாழைக் கையில் வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த உதயணன் பக்கம் சென்றாள். யாழை உதயணனுக்கு முன்னால் பட்டு உறையை விரித்து அதன்மேல் வைத்து விட்டு “இதன் நரம்புகள் தளர்ந்தமையால் இது தனது ஒலி பிழைத்தது. இதனுடைய நரம்புகளை ஏற்ற இடத்தில் அமையும்படி