பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பழக்கம் சிறிதும் இல்லாதவனுக்கு அதை எவ்வாறு திருத்தத் தெரிந்தது?’ என்று எண்ணுவார்களே எனவும் நினைக்கத் தவறி உதயணன், நரம்பை இறுக்கிக் கொடுக்கும் எண்ணத்துடனே யாழைக் கையில் எடுத்துவிட்டான். இது அவனது முதல் பலவீனமாயிற்று.

உதயணன் அந்த ஒரு நொடியில் தான் கொண்டிருக்கும் வேடம், தங்கியிருக்கும் இடம், அதற்கு முன் வேடத்திற்கு ஏற்பக் கூறிய பொய் வார்த்தைகள் முதலிய யாவற்றையுமே மறந்து யாழைச் செப்பஞ் செய்யத் தொடங்கிவிட்டான். அவ்வாறு அவன் செப்பஞ் செய்த முறையினாலேயே அவன் உண்மையில் யாழிலே பேரறிஞன் என்பதைப் பிறர் அறிந்து கொள்ளலாம். பதுமைக்கு எதிரில் அவனுக்கு அந்த நுணுக்கமான எண்ணம் நினைவிலே எழாமற் போய்விட்டது. நரம்புகளை ஏற்றபடி இறுக்கிக் கட்டிவிட்டு அவை சரியான முறையில் பண்ணோடு ஒலிக்கின்றனவா என்றும் ஆராயத் தொடங்கிவிட்டான் உதயணன். அவன் முற்றிலும் தன் நிலையையும் தான் நடிக்க வேண்டிய நடிப்பையும் நினையாதவனாகித் தன் கையிலுள்ள பதுமையின் யாழைப் பற்றிய குணக் குற்றங்களைச் சிந்திப்பதில் ஈடுபட்டுவிட்டான்.

அவன் நரம்புகளை இறுக்கியபின் யாழை மீட்டியபோது அதில் பகை நரம்பு ஒலித்தது கண்டு, அந்த யாழை மீண்டும் நன்றாக உற்றுப் பார்த்தான். அப்போது, பட்டுப்போய் நடுவே பொந்து விழுந்து சில நாள் தண்ணிரில் ஊறிய ஒரு மரத்திலிருந்து செய்யப்பட்டது அந்த யாழென்ற உண்மை அவனுக்குப் புரிந்தது. அந்த யாழ் இன்ன வகையால் குற்றமுடையது என்றெண்ணி அவன் அதைத் தோழியின் கையில் நீட்டினான். அதுவரை பதுமையும், தோழியும் அவன் முகத்தையே கூர்மையாகக் கவனித்தவாறே யாழை அவன் திருத்தும் விதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பார்வையில் அவன் யாழைப் பற்றி எண்ணும் நினைவுகளை ஒன்று விடாமல் அவர்களால் ஊடுருவ முடிந்தது. பதுமை ஒரளவு தன் முயற்சியில் வெற்றியும் அடைந்திருந்தாள். அவன் எப்படியும் யாழ் வாசிப்பதில் சிறந்த கலைஞனாகத்