பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்கள் பேசின

19

வேடங்களைக் கொடுக்கிறது. மாற்றத்திற்கு நொடிப்பொழுது வேண்டியதில்லை. ஏற்ற வேடம் தயாராகிவிடும். பிரச்சோதனன் மனமும் மனித மனந்தானே! அதனுடன் பண்பட்ட இயல்பும் தனி அமைப்பாக அதற்குண்டு. அந்த அமைப்புத்தான் தன் புதல்வர்களை உதயணனுக்குக் குற்றேவல் செய்யப் பணித்தும், அவன் தம்பியர்போல் இருக்குமாறு வேண்டியும், கலைகள் கற்க ஆணையிட்டும், பிரச்சோதனனை உதயணனுக்கு மதிப்பளிக்கும்படி செய்தது.


தன்னுடைய முதுமைக்கும் அதன் காரணமாகத்தான் பெற்றுள்ள அறிவு அநுபவங்கட்கும் ஒருபடி மேலாகவே, உதயணன் பெற்ற அறிவும் அனுபவமும் இருப்பது கண்டு பிரச்சோதனன் வியந்து அவனை விரும்பினான்.


இவ்வளவு எளிதில் பிரச்சோதனன் தன்னைப் பற்றிய கருத்தை மாற்றிக்கொண்டு, தனக்கு அரண்மனை இயற்றி, அரசகுமாரருக்கு ஆசிரியனாக்கியது உதயணனுக்குப் பெரிய சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது. ‘இதுவும் ஒரு சூழ்ச்சியோ?’ என்று எண்ணினான் உதயணன். பாண்டவர்க்கு நூற்றுவர் அரக்கில் அமைத்ததுபோலத் தனக்கெனப் பிரச்சோதனன் சமைத்த மாளிகையில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோ என்று ஆராய்ந்து முடிவில் ஒருவாறு ஐயம் நீங்கலாயினான்.


ஐயம் தீர்ந்த பிறகு தனக்கு அமைத்த அந்தப் புதுமாளிகையின் இயற்கை வளங்களைக் கண்டு மகிழ்ந்த வண்ணம் அங்கிருந்தான் உதயணன். இவ்வாறு தன் புது அரண்மனையின் காட்சியின்பத்தில் உதயணன் திளைத்துக் கொண்டு இருக்கும்போது, கதிரவன் தன்ஆட்சியை முடித்துக் கிளம்பினான். மாலைப் பொழுது வந்தது. மாற்றான் போற்றியதை நினைந்த மனத்தில் மெல்லத் தத்தையின் காதல் நினைவு தலைகாட்டியது. கண்களால் பேசிய காதல் பேச்சை இப்போது மனம் பேசத்தொடங்கியது. ஆனால் மனத்தின் இந்தப் பேச்சு நிறைவடையவில்லை. இதற்குப் பதில் சொல்ல இன்னொருத்தி வேண்டியிருந்தது.