பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகைவர் படையெடுப்பு

211

தோழி யாழில் இணைப்பதற்கான வேறு நரம்புகளைக் கொண்டு வந்து அவன் முன்பு வைத்துவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள். இசைக் கருவிகளையும் அவற்றின் அங்கங்களையும் பார்த்த அளவிலேயே அவை இன்ன இன்ன வகையில் குணமுடையன, இன்னின்ன வகையில் குற்றமுடையன என்று தெரிந்து கூறும் ஆற்றலுடைய உதயணன், இரண்டாவதாக எடுத்து வந்த அந்த நரம்புகளையும் பார்த்த மாத்திரையிலேயே, ‘இவையும் பயன்படா’ எனக்கூறி ஒதுக்கி விட்டான். தோழி மீண்டும் சென்று வேறு பலவகை நரம்புகளை எடுத்து வந்தாள். பதுமை கண்ணிமையாமல் வியப்புடனே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடம் கண்ட ஆராய்ச்சித் திறமும் ஆழமான பயிற்சியும் அவளை மலைத்துப் போகச் செய்திருந்தன. அவளுடைய தோழி கொண்டு வந்த யாழ் நரம்பில் வேறு ஒன்றை அசாதாரணமாகப் பார்த்த மாத்திரமே கையிலெடுத்த உதயணன், அதனுடைய முறுக்கை அவிழ்த்துப் பிரித்து அதில் மயிர் பின்னியிருப்பதை அவர்களுக்குக் காட்டினான். இவ்வாறே பல நரம்புகளை ஆராய்ந்து கூறியபின், இறுதியாகத் தோழி கொண்டு வந்த நரம்புகளில் பொற்சரடு போல் முறுக்கிய ஒரு நரம்பை யாழிலே பொருத்திக் கட்டினான். கட்டியதும் அவள் கையில் யாழைக் கொடுத்தான். “யாழையும் பாட்டையும் எல்லோரும்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்! ஆனால் இவரைப்போல அதன் குணாகுணங்களைச் சொல்லுவார் மிக அரியர்” என்று தோழியிடம் பதுமை உதயணனைப் புகழ்ந்து கூறினாள். உதயணன் புதிதாக நல்ல நரம்பைச் சேர்த்துக் கொடுத்த யவனக் கைவினை நயம் பொருந்திய அந்த யாழைத் தன் தோழியின் கையிலிருந்து வாங்கிப் பதுமை இனிமையாகப் பாடலானாள்.

உதயணன் அவள் பாடலைக் கேட்டு, அதன் இன்சுவையை அநுபவித்தான். பதுமையின் பாட்டு அவன் உள்ளத்தை உருக்கும் இனிமை கொண்டதாக இருந்தது. இவ்வண்ணமே காதலின்பமும் இசையாராய்ச்சியுமாகக் கழிந்து