பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

வந்தன அவர்கள் நாட்கள். ஒவ்வொரு நாளும் வந்து நிகழ்வதும் கழிந்து போவதும் அறியாமல் இருவரும் இருந்தனர். இவர்கள் கன்னிமாடத்தினுள் இவ்வாறு இருந்து வந்தபோது, தருசகராசனிடம் கேகயத்தரசன் அச்சுவப் பெருமகன், பதுமையை மணம் கேட்டுப் பரிசங்களோடு வந்து சேர்ந்தான். பதுமையின் எழிலையும் கலைப் பயிற்சிகளையும் பல முறை பலர் வாயிலாகக் கேள்விப்புட்டிருந்த அச்சுவப் பெருமகன் அவளைப் பற்றிய நினைவிற்குத் தன் நெஞ்சில் நிரந்தரமாக ஓரிடம் அளித்துவிட்டான். அந்த ஆசை காரணமாகவே தருசக வேந்தனிடம் நேரிலேயே சென்று கேட்டுப் பார்த்து விடுவது என்றெண்ணி இப்போது திருமணப் பரிசங்களுடன் ஆரவாரமாகப் புறப்பட்டு வந்திருந்தான். அவனும் ஒரு பேரரசன் என்ற முறையில் தருசகன் சிறப்புடன் அவனை வரவேற்பதற்காகத் தன் தலைநகரை நன்கு அணி செய்யச் சொல்லியிருந்தான். தருசகராசன் தானே தன் பரிவாரங்களோடு எதிரே சென்று அச்சுவப் பெருமகனை மதிப்புடன் வரவேற்றான். அச்சுவப் பெருமகன், தருசகனுடைய அரண்மனையில் விருந்தாளியாகத் தங்கிச் சில நாள்கள் இருந்தான்.

இந்தச் செய்திகளெல்லாம் கன்னிமாடத்திலுள்ளவர்களுக்கு விவரமாகத் தெரிவதற்குக் காரணமில்லாமற் போயிற்று. உதயணன் திடுமென்று ஒருநாள் தன் நண்பர்களைப் பற்றிய நினைவு வந்தவனாய் அவர்களைச் சந்திக்கும் எண்ணத்துடன் கன்னிமாடத்திலிருந்து வெளியேறிப் பிறரறியாமல் காமன் கோட்டத்திற்குச் சென்று விட்டான். அங்கே போன இடத்தில் நண்பர்களைக் காணமுடியவில்லை. தற்செயலாகத் தன்னுடன் வந்திருக்கும் வீரனொருவனை அங்கே சந்திக்க முடிந்ததனால் நண்பர்களும் தானிருந்த அதே அரண்மனையில் மாறுவேடத்தோடு வேலை பார்ப்பதையும் பிற விவரங்களையும் அவன் தெரிந்து கொண்டான். அதன் பின்னும் அவன் உடனே கன்னிமாடத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை. காரியார்த்தமாகச் சில நாள்கள் அங்கே