பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோலைமலைத் திட்டம்

215

புறப்பட்டிருந்தனர். ஆனால், வெளிப்படையாக எல்லோரும் மகத மன்னனின் எதிரிகள் என்ற முறையில் ஒரே கட்சியாக ஒன்று சேர்ந்திருந்தார்கள்! படைகளோடு புறப்பட்டு வந்த அந்த மன்னர்கள் யாவரும், மகத நாட்டு எல்லைக்கு அப்பால் வந்து தங்கி முற்றுகைக்கு ஏற்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மீன்கள் காலருகே வருகின்றவரை அடங்கி ஒடுங்கி நிற்கும் கொக்குப் போலத்தான் அந்தப் பகையரசர்களும், மகத நாட்டு எல்லையில் வந்து தங்கிக் காலந் தாழ்த்திக் கொண்டிருந்தனர். பகையரசர்கள் இவ்வாறு வந்து தங்கியிருந்த செய்தி மெல்ல மெல்லப் பரவி, மகத நாடெங்கும் தெரியலாயிற்று. தலைநகரில் தருசகராசனுக்கும் இச் செய்தி விரைவில் தெரிந்துவிட்டது.

41. சோலைமலைத் திட்டம்

ணம் பேச வந்திருக்கும் அச்சுவப்பெருமகன் தன்னுடைய விருந்தினனாகத் தங்கியிருக்குப் பொழுதே சற்றும் எதிர்பாராத நிலையில் தங்களுக்குள் ஒன்று கூடிப் போருக்கு இழுக்கும் பகைவர்கள் செயலைக் கண்ட தருசகன், உண்மையாகவே மலைப்பு அடைந்தான். படையெடுப்புச் செய்தி கேட்ட நகரத்து மக்கள் கலவரமடைந்து அவரவர்க்குத் தோன்றிய கருத்துக்களை அங்கங்கே பேசத் தொடங்கி விட்டனர். பொதுவாக நகர் முழுதும் இச் செய்தி திகைப்பையும் அச்சத்தையும் ‘இனி என்ன நிகழுமோ?’ என்ற பர பரப்பையும் உண்டாக்கியிருந்தது. நகரையும் அரசனையும் திகைப்பும் கவலையும் கொள்ளச் செய்திருந்த இச் செய்தி அரண்மனைக் கன்னி மாடத்திலும் அந்தரப் புரத்திலும் கூடப் பரவிவிட்டது. ஏற்கெனவே மாணகன்(உதயணன்) தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கன்னிமாடத்திலிருந்து போய் விட்டதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள் பதுமை. இந்தப் படையெடுப்புச் செய்தி அவளுக்கு இன்னும் மிகுந்த துயரத்தை அளித்தது. ஆனாலும் அவளுக்கு உடனே என்ன தோன்றியதோ தெரியவில்லை; தன் தோழி அயிராபதியை