பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. விதி வென்றது

னத்தை மையல் செய்யும் மாலை நேரம். குஞ்சரச்சேரி மாளிகையின் அழகிய சோலையில் உதயணன் உலாவிக் கொண்டிருந்தான். அந்த அழகிய பெரிய சோலையில் சந்தன மரங்களை வேலியாக எடுத்த சண்பகத் தோட்டமொன்று உட்பகுதியாக அமைந்திருந்தது. சண்பக மரங்களுக்கிடையே வேங்கை மரமொன்று இயற்கையாக உண்டாகியிருந்தது. அந்த வேங்கை மரத்தின் கிளையில் ஓர் ஊஞ்சல். அதில் ஆடுவதற்கும் ஆட்டுவதற்கும் போட்டியிட்டனர் அங்கிருந்த சின்னஞ்சிறு பெண்கள். அப்பெண்கள் பாடிய ஊஞ்சல் பாட்டிற்குத் தகுந்தபடியாக அங்கிருந்த மயில் தோகை விரித்து அபிநயத்துடன் ஆடத்தொடங்கியது. இந்த ஆடல் பாடல்களைக் கேட்டுப் பக்கத்திலிருந்த வெயில் நுழைவறியாத புதரில் உள்ள தும்பியும் வண்டும் ஒன்றையொன்று மருட்டின. கொம்பிலிருந்த மணிநிற இருங்குயில் பேடை தன் அன்புச் சேவலை அகவி அகவி அழைத்தது. கமுக மரத்தில் தன் சேவலைக் காணாத அன்னப்பேடை பாளையைக் கண்டு சேவல் அதில் மறைந்து விட்டதோ என ஐயுற்றது. உதயணன் இவற்றையெல்லாம் கண்டான். கண்ட காட்சிகள் அவன் தனிமையை அவனுக்கு உணர்த்தின. தத்தையின் மேற்சென்ற நினைவோடு, ஒரு புறமாகச் சுற்றிக் கொண்டிருந்த உதயணன் தனிமை வேதனையால் சூழப்பட்டான். அப்போது கதிரவன் பழுக்கக் காய்ச்சிய பொன் வட்டத்தைப்போல் மேலை மலைமீதில் மறைந்து கொண்டிருந்தான். விலங்குகளும் பறவைகளும் தனித்திருக்கும் தத்தம் துணைகளை நோக்கிச் சென்றன. ஒரு பெரிய சக்கரவர்த்தி வாழும் வரையிலும் அவனுக்குட்பட்டிருந்து, அவன் மறையும்போது மெல்ல வெளிக்கிளம்பித் தம்முருக்காட்டி ஆட்சி செலுத்த முயலும் பல பகைக் குறுநில மன்னர்களைப்போல், சூரியன் மறைந்ததும் வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறுசிறு விண்மீன்கள்