பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

இங்கிருந்து திரும்பி ஓடுமாறு செய்ய முடியும். நாமும்-நம்மைச் சேர்ந்தவர்களும் வாணிகம் செய்வோர்போல மாறுவேடங் கொண்டு பகைவர் ஆதரவு பெற்று, அவர்கள் படையில் கலந்துகொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொண்ட பின்பு, நள்ளிரவில் அவர்கள் படைக்குள்ளேயே கலவரத்தை உண்டாக்கிவிட்டு, நம்மை அடையாளங் கண்டு கொள்ள முடியாதபடி போர் செய்து அதனால் அவர்களை இங்கிருந்து துரத்த வேண்டும். இம்முயற்சியில் நமக்கு வெற்றி கிட்டுமானால், ‘யாவும் உதயணன் ஆற்றலால் விளைந்தவை’ என்று நம்மவர்களைக் கொண்டே உன் புகழை நகரெங்கும் பரப்பித் தருசகன் செவிகளுக்கும் அது எட்டச் செய்யவேண்டும். அப்போது நீ இங்கு வந்திருப்பதையும் காலமறிந்து செய்த உனது உதவியையும் அறிந்து தருசகன் பாராட்டுவதற்கு நேரும். அந்த நிலை ஏற்பட்டால்தான் பதுமையின் தொடர்பிற்கும், மற்றவற்றிற்கும் தருசகன் உதவி உனக்குக் கிடைக்க முடியும். இப்போது அதற்கான அடிப்படைச் செயல்களில் நாம் ஈடுபட வேண்டும்” என்று உருமண்ணுவா தன் கருத்துக்களை உதயணனுக்குத் தெளிவாக விவரித்தான்.

காரண காரியங்களுடனே சந்தர்ப்பத்திற்கு ஏற்ற விதமாக உருமண்ணுவா கூறிய திட்டங்களைக் கேட்டபின்பு, அவையே தக்கவை என்று தோன்றியது உதயணனுக்கு. அத்திட்டங்களின் படியேதான் செயலாற்ற வேண்டியது என்ற முடிவிற்கு வந்தான் அவன். இப்படியே உதயணனும் உருமண்ணுவாவும் சில நாழிகைப்போது தங்களை மறந்து சிந்தனையிலே ஆழ்ந்தவர்களாய் அமர்ந்திருந்தனர். சிந்தனை கலைந்த உடனே உருமண்ணுவா உதயணனையும் அழைத்துக் கொண்டு காமன் கோட்டத்திலிருந்து வெளியேறினான். மேலே நடக்கவேண்டிய செயல்களை வரிசையாக நிறைவேற்றுவதற்கு வேண்டிய பொறுப்பு அவ்விருவருக்கும் மட்டுமே மிகுந்த அளவில் இருந்தது. மகத நாட்டின் தலைநகராகிய இராசகிரிய நகரத்திற்குப் பக்கத்தில் ‘சின்னச்