பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோலைமலைத் திட்டம்

219

சோலை’ என்னும் பெயரையுடைய மலை ஒன்று இருந்தது. உதயணன் முதலியவர்களோடு மகதநாட்டிற்கு மாறுவேடத்தோடு வந்திருந்த வீரர்களில் பெரும்பாலோர் இந்த மலையடிவாரத்திலும் இதன் சுற்றுப்புறங்களிலும் மறைமுகமாகத் தங்கள் வாழ்நாள்களைக் கழித்து வந்தனர். அவர்கள் எல்லாரையும் ஒன்று சேர்க்க வேண்டிய அவசியம் இப்போது உதயணனுக்கு ஏற்பட்டிருந்ததனால், அவன் உருமண்ணுவாவுடன் காமன் கோட்டத்திலிருந்து புறப்பட்டு நேரே சின்னச் சோலைமலைக்கு வந்திருந்தான்.

சின்னச் சோலைமலை, தொடர்ச்சியான பெரிய மலை அல்ல. ஒரு சிறுகுன்று போன்றதுதான் அது. உருமண்ணுவாவின் சொற்படி உதயணன் அந்த மலையின்மேல் ஏறித் தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே தெரியக் கூடிய அடையாளப் பாடல் ஒன்றை உரத்த குரலிற் பாடினான். அவன் பாடியபோது அமைதி நிறைந்திருந்த இரவு நேரமாகையால், அவனுடைய அந்தப் பாட்டுக் குரல் குன்றைச் சுற்றி வெகுதொலைவுவரை தெளிவாக ஒலித்தது. அழைப்புக்கு அறிகுறியான அந்த அடையாளப் பாட்டை உதயணன் பாடி முடித்தவுடன் உருமண்ணுவாவோடு அவனும் குன்றின் மேலேயே இருந்து கொண்டான். இரவு நடு யாமத்திற்குள் பாட்டொலியைக் கேட்ட எல்லா வீரர்களும் குன்றின்மேல் உதயணனும் உருமண்ணுவாவும் இருந்த இடத்திற்கு மகிழ்ச்சியுடனே வந்து கூடிவிட்டார்கள். தங்கள் அரசன் மகத மன்னனுடைய நட்பு வேண்டி வந்திருப்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கு ஏதாவது நல்ல வழி புலப்பட்டிருக்கும் என்றே இந்தப் பாட்டொலி கேட்டதும் அவர்களிற் பலர் எண்ணி வந்திருந்தார்கள். சின்னச் சோலைமலையைச் சுற்றி உள்ள வீரர்கள் யாவரும் வந்தபின், தங்கள் அரசனிடம் பற்றுமிக்க அந்த வீரர்களைத் தங்கள் திட்டத்திற்கு உடன்படச் செய்யும் கருத்துடன் உருமண்ணுவா அவர்களோடு பேசினான். அந்தப் பேச்சுக்கு அவர்களிடமிருந்து எதிர்பார்த்த பயன் விளைந்தது.