பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

நாங்கள் அவனைக் கருவறுக்கக் காலம் பார்த்துக் கொண்டிருந்தோம். நல்லவேளையாக நீங்களும் படையெடுத்து வந்தீர்கள்” என்று பகைவர்கள் பாசறையை அடைந்ததும் வயந்தகன் பகைமன்னர்களை நோக்கிக் கூறினான். பகை மன்னர்கள் அவன் கூறியதை நம்பி வரவேற்றனர். சூழ்ச்சி வென்றது. தங்களைப் பலப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த பகையரசர்கள், மகத நாட்டின் பகைவன் என்று சொல்லிக் கொண்டு யார் வந்தாலும் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளத் துணிந்து இருந்தார்கள். அந்த நிலைதான் தருசகனின் பகைவர்கள் எனக் கூறிக்கொண்டு குதிரை விற்பவர்களாகவும், வேறு பலவகை வாணிகர்களாகவும் வந்த உதயணன் முதலியோரை அவர்கள் தயங்காமல் தங்களுடன் சேர்த்துக் கொள்வதற்குக் காரணமாக இருந்தது. தனித்தனிப் பாசறைகளில் தத்தம் படைகளுடனே தங்கிக் காலத்தை எதிர்நோக்கியபடி காத்திருந்த அப்பகையரசர்கள் ஆறு பேரும், மகிழ்ச்சியோடு குதிரை விற்பவர்களையும் பிறரையும் வரவேற்று உபசரித்தனர். தங்கள் பாசறைகளிலேயே தங்கியிருப்பதற்கும் இடமளித்தனர்.

‘இராசகிரிய நகரத்தின் அமைப்பு, அந் நகரத்தை எப்படி எப்படித் தாக்கலாம்?’ என்பது போன்ற செய்திகளை யெல்லாம் குதிரை வாணிகர் தலைவனாக மாறுவேடத்திலிருந்து வயந்தகனிடம் பகையரசர்கள் தூண்டித் தூண்டி அவலோடு கேட்கத் தொடங்கினார்கள் வயந்தகன் அவற்றிற்கு விருப்பத்தோடு விடை கூறுபவன் போலப் பொய்யாக எதை எதையோ சொல்லி நடித்தான். மகதநாட்டு எல்லைப் புறத்தில், ஒரு பெரிய சமவெளியில் பல பாசறைகளை அமைத்து அங்கங்கே பிரிந்து தனித் தனியாகத் தங்கியிருந்த அந்த அரசர்கள், ஒவ்வொருவரும் மாறுவேடத்தில் வந்த வணிகர்களைத் தங்கள் தங்களோடு தங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலும், உதயணன் முதலியோர், தாங்கள் எல்லோரும் தனியாக ஒரே பாசறையில் தங்க வேண்டும் என்றே கருதினர். சில செயல்களைத் தங்களுக்குள் சிந்தித்துக்