பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

வர வேண்டுமென்றால் அவர்களுடைய துணிவும் தன்னம்பிக்கையும் அளவுக்கு அதிகமாக இருந்தாலொழிய அது முடியாது என்று எண்ணி அஞ்சினான் தருசகன். ஆனாலும் தன் மனத் தளர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்வது அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்றதல்ல, என்று கருதி வெளிப்படையாகச் சினங் கொண்டவன்போல நடித்துப் படைத் தலைவர்களிடம் படைகளை விரைவில் திரட்டுமாறு ஆணையிட்டான்.

‘மீண்டும் பகைவர்கள்கூடி வந்துவிட்டார்கள். நம் அரசன் அவர்களை எதிர்த்துப் போர் செய்யக் கருதியிருக்கின்றான்’ என்ற செய்தி படைத் தலைவர்களால் எங்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. அரண்மனையிலேயே வேறொரு பகுதியில் தருசகனுடைய விருந்தினனாகத் தங்கியிருந்த உதயணனுக்கு முதலில் இந்தச் செய்தி தெரியவில்லை. படையெடுத்துப் பகைவர் மறுபடியும் வருவதையும் விரைவில் எதிரிப் படைகள் தாக்கலாம் என்பதையும் தருசகனுடைய ஒற்றர்கள் கூறியவுடன், அதைக் கேட்ட தருசகன் படை திரட்ட ஆணையிட்டிருப்பதை உதயணன் அறிந்தபோது, தருசகனுக்கு இம் முறையும் தான் உதவ வேண்டும் என்றே அவன் எண்ணினான். செய்தியைக் கேள்விப்பட்ட உடனே, தன்னுடன் தங்கியிருந்த உருமண்ணுவா முதலிய நண்பர்களிடம் அதைக்கூறி, “இப்போதும் நாமே முன்னின்று பகைவர் படையை அழித்துத் தருசகனை காப்பாற்ற வேண்டும்” என்று உரைத்தான் உதயணன். மேலே செய்ய இருப்பவை பற்றி நண்பர்களோடு கலந்து ஆலோசித்தான். “விருந்தினனாக வந்து தங்கியிருக்கும் நான், ஏற்கெனவே இந்தப் படையை விரட்டித் தனக்கு உதவி செய்தவன் என்ற கருத்தினால் கூச்சத்தோடு என்னை மறுபடி சிரமப்படுத்த விரும்பாது, தருசகன் இப்போது எனக்கு இச்செய்தியைச் சொல்லி அனுப்பாமல் இருக்கலாம். ஆனாலும் நாம் இதனைக் கேட்டறிந்த பின்னும் வாளா இருத்தல் கூடாது” என்று உதயணன் கூறியதை