பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓடினோர் கூடினர்

233

உருமண்ணுவா முதலியோரும் மறுக்கவில்லை. போரில் தருசகனுக்கு உதவி செய்து, முழுமையாக வெற்றிபெறத் துணைபுரிய வேண்டும் என்ற முடிவை உதயணனைச் சேர்ந்த யாவரும் ஒப்புக் கொண்டனர். உடனே வயந்தகனிடம் தன் கருத்துக்களை விவரித்து, அவற்றையெல்லாம் தூதுவனாகச் சென்று தருசகனிடம் கூறி வருமாறு அனுப்பினான் உதயணன். வயந்தகன், உதயணன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு, தருசகனிடம் அவற்றை எல்லாம் உரைப்பதற்காகத் தூதுவனாகச் செல்லலானான்.

“பிரச்சோதனன் மகளாகிய தன் ஆருயிர்க் காதலி வாசவதத்தை இலாவாண நகரத்து அரண்மனையில் தீப்பட்டு இறந்த நாளிலிருந்தே, உதயணன் வாழ்க்கையின்மேல் வெறுப்புற்றுச் சுற்றி வருகின்றான். எங்கள் அரசனாகிய உதயணன் அவ்வாறு ஊர் ஊராகச் சுற்றி வரும்போதுதான் இங்கும் வரும்படியாக நேர்ந்தது. இங்கு வந்தபோது, உங்கள் மகதநாட்டின்மேல் மாற்றரசர் பலர் கூடிப் படையெடுத்து வந்துள்ளனர் என்பதை நாங்களும் எங்கள் அரசர் பிரானும் கேள்வியுற்றோம். கேள்வியுற்ற உடனே, ‘என் தந்தையாருக்கு நெருங்கிய நண்பராகிய மகத மன்னரின் பகைவர்களை இங்கிருந்து ஓடச் செய்துவிடுவது என் கடமை’ என்று கூறி இரவுக்கு இரவே சூழ்ச்சிசெய்து அவர்களை ஓடிப் போகுமாறு செய்தான், எம் அரசன் உதயணன். ஆனால் அதே பகையரசர்களே இப்போது, மீண்டும் தங்களுக்குள் ஒற்றுமையுற்று மகத நாடு நோக்கிப் படைகளோடு வந்திருப்பதாகத் தெரிகிறது. இச் செய்தியை எம் அரசனிடம் தங்களுக்குள்ள அன்பு காரணமாகக் கூறித் தாங்கள் சொல்லி அனுப்பாவிடினும், நாங்களே நிலைமையை அறிந்துகொண்டோம். பகைவர்கள் மறுமுறையும் படையெடுத்து வந்திருப்பதை எண்ணி நீங்கள் சிறிதும் கலங்க வேண்டியதில்லை. எங்கள் அரசர் பிரானாகிய உதயணனாற் செய்ய முடிந்த எந்த உதவியையும் பிறருக்குச் செய்ய அவர் ஒருபோதும் தயங்குவதே இல்லை. மேலும் தாங்களே தங்கள் படைகளுடனே