பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

நேரிற் சென்று இந்தப் பகைவர்களுடன் போரிடுவது தங்களது தகுதிக்கு அவ்வளவு ஏற்றது ஆகாது. போரில் வெற்றி அல்லது தோல்வி என்பது மதில்மேற் பூனையைப் போல ஆகும். யார் பக்கம் வெற்றி, யார் பக்கம் தோல்வி என்பது அறிய முடிந்தது அல்ல. ஒருகால் தோல்வி நம் பக்கம் நேருமானால், ‘தாங்களே நேரில் போருக்குச் சென்றும் பகைவர்கள் வென்றுவிட்டார்களே!’ என்று நாளைய உலகம் தங்களுக்கு அழியாப் பழி ஒன்றை உண்டாக்கிவிடும். நாங்களும் எங்கள் மன்னரும், தங்கள் படை உதவியுடன் மட்டும் இந்தப் போருக்குச் சென்றால் தங்களுக்கு அவ்வாறு எத்தகைய பழியும் ஏற்படுவதற்கு வழி இல்லை. வெற்றியானால் அந்தப் பெருமிதத்தை நாங்கள் தங்களுக்கே அளிப்போம். தோல்வி என்றாலோ அந்தக் களங்கத்தைத் தங்கள் பக்கம் சாரவிடாமல் எங்களிடம் நாங்களே அமைத்துக் கொள்வோம். எனவே மகதவர் பேரரசே! ஆற்றலுடனே ஒன்றுபட்டு வந்திருக்கும் பகைவர்களை வென்று வருவதற்காகத் தாங்களே நேரிற் செல்லவேண்டாம். எங்கள் மன்னர் பிரான் உதயணனுக்குத் தங்கள் படைகள் யாவற்றையும் அளித்துப் போர்முனை நோக்கி அனுப்புங்கள். அதுவே சுலபமான வெற்றிக்கு ஏற்ற வழி! இவை பற்றித் தங்கள் கருத்து யாது என்பதை அறிந்துவரச் சொல்லியே என்னைத் தங்களிடம் தூதுவனாக அனுப்பினார் எங்கள் மன்னர்” என்று உதயணன் தன்னிடம் கூறி அனுப்பியவற்றை எல்லாம் வயந்தகன் தருசகராசனிடம் விளக்கமாக எடுத்து உரைத்தான்.

தன் முன் நின்ற வயந்தகன் கூறியவற்றைத் தருசகன் அமைதியாக இருந்து முற்றிலும் கேட்டான். உதயணனின் கருத்துப்படியே நடந்து கொள்வதுதான் நல்லது என்ற எண்ணமே தருசகனுக்கும் உண்டாயிற்று. அவன் வயந்தகன் கூறியவற்றைப் பூரணமாக நம்பி ஏற்றுக்கொண்டான். இருப்பினும் தன் அவையோர்களிடம் அதைப் பற்றிக் கூறி அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் அறிய வேண்டியிருந்தது. அவசியத்தை உத்தேசித்து அதை அவனால்