பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

னான் அவன். தான் உதவாமல் இருந்துவிட்டால், தருசகனே தன்னைப் பற்றித் தவறாக எண்ணிக் கொள்வான் என்றும் அவனுக்குத் தோன்றியது. ‘தான் எப்படியும் இந்தச் சந்தர்ப்பத்தில் தருசகனுக்கு உதவி செய்தே ஆகவேண்டும்’ என்று முடிவு செய்துகொண்ட அவன், நேரே தருசகனைச் சந்திப்பதற்குச் சென்றான். “உங்களை எதிர்த்துப் படையெடுத்து வந்திருப்பவர்கள் தேவர்களே ஆனாலும் சரி! நான் ஒருவனே அவர்களை வென்று உங்களுக்கு இழுக்கு வராமல் பாதுகாப்பேன். அருள்கூர்ந்து எனக்கு அனுமதி கொடுங்கள். நான் படைகளோடு சென்று வெற்றியைக் கொண்டு வருகிறேன்” என்ற கேகயத்து அரசன் அச்சுவப் பெருமகன், வலிய முன்வந்து கூறியபோது தருசகன் வியப்படைந்தான். கேகய மன்னனின் வேண்டுகோளை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. ஏற்கெனவே உதயணன், வயந்தகன் மூலமாகக் கூறி அனுப்பியவற்றைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்த தருசகன், இப்போது தன் தங்கையை மணம் பேசி வந்த கேகயன் கேட்கும் வேண்டுதலுக்கு செவிசாய்த்துத்தான் ஆக வேண்டியிருந்தது. உதயணனுடனே தன் படைகளை உதவிக்கு அனுப்பும்போது கேகயத்தரசனையும்கூட அனுப்பலாம் என்று கருதினான் தருசகன். “என்மேற் படையெடுத்து வந்த பகையரசர்களை வெல்வதற்கு, உதயணன் தானே போருக்குச் செல்வதற்கு அனுமதி அளித்து என்னுடைய படைகளையும் உதவும்படி முன்பே வேண்டிக் கொண்டிருக்கிறான். நீ அவனோடு உடன்சென்று போர் செய்ய விரும்புவாயாயின் அதனை நான் மறுக்கவில்லை” என்று அச்சுவப் பெருமகனை நோக்கித் தருசகன் பதில் கூறினான். உதயணனோடு போர்க்களம் சென்று, தருசகனை வெல்லக் கருதிப் படையெடுத்து வந்திருக்கும் ஆத்திரங் கொண்ட பகையரசர்களோடு தானும் போரிடுவதற்குச் சம்மதித்தான் கேகய மன்னன், அவன் சம்மதத்தைக் கேட்டதும் தருசக மன்னன் அங்கே காத்திருந்த வயந்தகனைத் தன் அருகில் அழைத்தான். வயந்தகன் அருகில் நெருங்கி வந்து நின்று கொண்டதும், உதயணனுக்குத் தான் அனுப்ப வேண்டிய