பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அலங்கரிக்கப்பட்ட யானைகளின்மேல் ஏறிக்கொண்டு முன்னணியில் விளங்கினர். அதற்கு முன்னால் ஒளி தவழும் அம்பாரியோடு கூடிய வேறோர் பெரிய யானை உதயணன் வந்து ஏறிக்கொள்ளுவதற்காக என்றே நின்றுகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் உதயணனும் போர்க் கோலத்துடனே வந்து அதன் மேல் ஏறி அமர்ந்து கொண்டான். சுற்றியிருந்த கோடிக்கணக்கான படை வீரர்களின் வாழ்த்தொலி வானைப் பிளந்தது. படைகளெல்லாம் புறப்படும் நேரமும் வந்தது. அந்த நேரத்தில் கேகயத்தரசனை உடன் அழைத்துக் கொண்டு தருசகன் அங்கே வந்தான். உதயணன் முதலியோரும் படைகளும் அவர்களுக்கு மிகுந்த மரியாதை செய்து வரவேற்றனர். தருசகன், உதயணனைத் தனியே அழைத்து, “கேகய மன்னன் இங்கே சுபகாரியத்தைப் பற்றிப் பேசி விட்டுப் போவதற்காக வந்து தங்கியவன். தற்செயலாகத் திடுமென்று ஏற்பட்ட இந்தப் போரில் அவன் விரும்பிக் கலந்துகொண்டாலும் அவனுக்குத் துன்பம் நேராமல் நாம் காத்துக்கொள்ள வேண்டும்” என்று கவலையோடு கூறினான். உதயணன் கேகய மன்னனைக் காப்பது தன் கடமை என்றும் உறுதிமொழி கூறியபின், தருசகன் இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றான். அவன் சென்றதும் அச்சுவப் பெருமகன் தனக்கு என்று இருந்த போர் யானையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். உதயணன், உருமண்ணுவாவையும் கேகயத் தரசனையும் ஒரு வரிசையில் முன்னாக அமைத்து மற்றப் படைகளையும் ஏற்றபடி வரிசை செய்துகொண்டு புறப்பட்டான். கேகயத்தரசனுக்குத் துன்பம் நேராமல் காக்கவே அவனை உருமண்ணுவாவின் பக்கத்தில் நிறுத்தினான். தான் எல்லாருக்கும் முன் சென்று பகைவர்கள் பாசறையை நோக்கிப் படையைச் செலுத்தினான் உதயணன். பகைவர்கள் பாசறையை நேரடியாகப் போய் வளைத்துக் கொள்ள வேண்டுமென்பது அவன் திட்டமாயிருந்தது.

பகைவர் பாசறைக்கு அருகில் இரு தரப்புப் படைகளும் சந்தித்தன. தருசகன் படையை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் போலப் போரிடுவதற்கு ஏற்ற நிலையிலிருந்தனர்