பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறுபடியும் போர்

239

பகைப் படையினர். ஒருமுறை ஏமாற்றப்பட்டவர்கள். ஆகையால் இப்போது அவர்களுடைய ஆவேசமும் ஆத்திரமும் வளர்ந்து பெருகியிருந்தன. உதயணன் தலைமையில் கேகயன், உருமண்ணுவா முதலியவர்களோடு வந்த தருசகனின் வீரர்களும் தீடீர்த் தாக்குதலுக்கு ஆயத்தமாகவே வந்திருந்தனர். படைவீரர்கள் சந்தித்த உடனேயே எதிர்பார்த்ததைக் காட்டிலும் விரைவாகப் போர் தொடங்கி விட்டது. இரண்டு பக்கத்திலும் வீரர்கள் நிறைகுறை சொல்ல முடியாதபடி ஈடுபட்டுப் போர் செய்தனர். காலாட்படையினர், யானைப்படையினர் என்றும் தனித்தனியே பிரிந்து நின்று போரிட்டனர். ஆரவாரம் செய்யும் அலைகடல் போலப் போர்க்களமே பயங்கரமான ஒலிகளால் நிறைந்து கலகலப்பாகவும் சுறுசுறுப்பாகவும் விளங்கியது. சிறிது நேரத்திற்கு முன்பு அமைதி தவழ்ந்த மண்ணில், இப்போது குருதி பெருகி ஓடியது. உடல்கள், யானைகள், குதிரைகள் சிலபல பிண்டங்களாகக் கோரமாய் வெட்டுண்டு வீழ்த்தப்பட்டன. உயிரைப் படைத்த மண், உயிரைப் போரிட்டு விளையாடச் செய்யும் பயங்கரத்தை யுத்த மூலமாகக் கண்டது. நேரம் ஆக ஆகப் போர் வெறி மூண்ட நிலையில், இரண்டு படைகளும் மிக நெருங்கி நின்று தாக்கிக் கொள்ளத் தலைப்பட்டன. போரின் வேகம் உச்சநிலையை அடைந்திருந்தது.

உதயணன், உருண்ணுவா, கேகய மன்னன் மூவரும் ஒரு பகுதியாகப் பிரிந்து தம் படைகளுடன் எலிச் செவியரசனைத் தாக்கிக் கொண்டிருந்தனர். எதிர்த்தரப்பில் எலிச் செவியும் அவன் தம்பி சித்திராங்கதனும் இருந்தனர். அண்ணனும் தம்பியுமாக அவர்கள் ஒன்று கூடித்தாக்கியதனால், உதயணன் பக்கம் மூவர் இருந்தும் தாக்குதலைச் சமாளிப்பது சற்றுக் கடினமாகவே இருந்தது. எலிச்செவி அரசனுடைய தம்பியை மடக்கிக் கைப்பற்றி விட்டால் அப்பால் அவனையும் சுலபமாக மடக்கிவிட முடியும் என்று தோன்றியது. உதயணனுக்கு இந்த எண்ணம் தோன்றவும் எலிச்செவியின் தம்பி