பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

எப்படிக் கைதியாக்கினானோ அப்படியே உருமண்ணுவாவை எலிச்செவியும் கைதியாக்கி விட்டான். இடையில் கேகயன் கொலை செய்யப்பட்டதும் உதயணன் பக்கம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக வந்து வாய்த்து விட்டது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் நம்பிக்கையையே முற்றிலும் உருக்குலைத்து அழிக்கும்படியான இரண்டு பெரிய நஷ்டங்கள் ஏற்பட்டு விட்டதைக் கண்டு உதயணனுடைய மனம் ஒடுங்கிப் போயிற்று. ‘கேகயன் மரணமடைந்து விட்டானே என்று மலைத்து வேதனைப் பட்டுக் கொண்டிருக்கின்றபோதே, இப்படி உருமண்ணுவாவும் எதிரி கையிலே போய்ச் சிக்கிக் கொண்டானே’ என்று வருந்தினான் உதயணன். “என் தம்பியை உதயணன் சிறைப்பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறான். அதே போலத் தான் நானும் உன்னைச் சிறைப்பிடித்திருக்கிறேன். என் தம்பி உதயணனிடமிருந்து விடுதலை பெற்றால் ஒழிய நீ என்னிடமிருந்து தப்ப முடியாது, அஞ்சாதே! உன்னை நான் வீணாகத் துன்புறுத்தமாட்டேன். ஆனால், என் தம்பி உன் தலைவன் கைகளினால் துன்புறுத்தப்படுவதைப் பார்க்கவும் நான் பொறுக்க மாட்டேன்” என்று எலிச்செவி, உதயணன் காதுகளிலும் கேட்கும்படியான உரத்த குரலில் உருமண்ணுவாவை நோக்கிக் கூறினான். உதயணனும் அவன் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டான். எப்படியாவது உருமண்ணுவாவைப் பகைவன் கையிலிருந்து மீட்டுவிட வேண்டும் என்றும் அதற்காக அவன் சிந்தித்தான்.

“நீ சிறை பிடித்திருக்கும் இவன் எங்கள் மன்னனாகிய தருசகனுக்கு ஒப்பானவன்! இவனுக்கு எந்தவிதமான துன்பமும் இழைக்காமல் நீ விடுதலை செய்து எங்களிடம் அனுப்பிவிட்டால் நானும் உன் தம்பியை உடனே விடுதலை செய்து விடுகிறேன்” என்று அவன் கூறியவற்றிற்கு மறுமொழி கூறுகின்றவனைப்போல உதயணனும் இரைந்து பதில் சொன்னான். இந்தப் பதிலை எலிச்செவியும் கேட்டிருந்தாலும் இதற்கு விடை கூறாமலே அவன் மேலும் போர்