பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உதயணன் சம்மதம்

249

தவழும் முகபாவத்தோடு அந்த முதுமகளை நோக்கினாள். அவளது முகம் நகைத்தது. அகம் புகைந்தது. தான் கூறிய செய்தியைக் கேட்டவுடன் பதுமையின் பவழச் செவ்விதழ்களில் முத்துநகை மலர்ந்தது. அவள் முகம் மலர்ச்சி பெற்றதைக் கண்ட முதுமகள் உண்மையாகவே பதுமைக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். அவள் அவ்வாறுதானே எண்ண முடியும்? பதுமையின் உள்மனம், கேள்விப்பட்ட செய்தியால் கொதித்தது. காமன் கோட்டத்திலும் கன்னி மாடத்திலுமாகக் கலந்து பழகிக் காதல் உறவு கொண்ட மாணகனை எண்ணிக் கண்ணிர் வடித்தது அவள் மனம். மாணகனை மறந்து, வேற யாரையாவது மணக்க நேரிடுமானால், வாழவேண்டும் என்ற ஆசையே அவளுக்குத் தோன்றவில்லை. அவள் மனத்தின் உணர்ச்சிக் கதிர்கள் யாவும் ஒன்றுபட்டு, ‘மணந்தால், மாணகனை மணக்க வேண்டும். சந்தர்ப்பம் அதற்கு மாறாக ஏற்படுமானால் உயிரையே மாய்த்துக்கொள்ள வேண்டும்’ என்ற ஒருமை நிலையை அவளுக்கு உண்டாக்கிக் கொடுத்திருந்தன. அவள் இந்தச் சோதனையால் மனம் கலங்கினாள்.

48. உதயணன் சம்மதம்

திரவனை நோக்கி மலர்கின்ற பூக்களைப்போலப் பெண்ணின் உள்ளமும் காதல் என்ற மாபெரும் ஒளிப் பிழம்பை நோக்கி ஒரே ஒரு முறைதான் மலர முடியும். வாழ்விலும் அந்த முதற் காதலின் மலர்ச்சியைத் தொடர்ந்ததாகவே பின் வாழ்க்கை அமைய வேண்டும். நிறங்களைப் பிரித்தெடுக்க முடியாமல் ஏற்ற இடங்களில் ஏற்றவாறு கலந்து தீட்டிய ஒருவகை எழிலோவியம் போன்றதுதான் காதல். முதலில் வரைந்த அந்த ஒவியத்தை அழித்து, அதற்குப் பயன்பட்ட அதே வர்ணங்களை வைத்து வேறோர் ஒவியம் எழுத இயலாதல்லவா? இதேபோல் காதல் வாழ்விலும் உள்ளத்து உணர்ச்சிகள் ஒரே ஒருமுறை குறிப்பிட்ட இரண்டு ஆண்பெண் மனங்களுக்குள்ளேதான்