பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

வாழ்வின் சிந்தனை வேறு அரசியல் வாழ்வின் சிந்தனை வேறு. பொதுவாழ்வில் நல்லவற்றின் நன்மையும், தீயவற்றின் தீமையும் ஆகிய இவ்வளவே சிந்தனைக்குப் போதுமானவை. அரசியல் வாழ்வில் எங்கும் எதனுள்ளும் சூழ்ந்து ஆழ்ந்து சிந்திக்கும் நுட்பமான உளப்பண்பு வேண்டும். நல்லவற்றுள்ளே தீமையுண்டா, தீயவற்றுள்ளே நன்மை உண்டா என முரண்படச் சிந்திக்கும் இயல்பும்கூட அங்கே அவசியம் வேண்டும். எனவே, பதுமையைத் தான் மணந்து கொள்ள வேண்டும் என்ற தருசகனின் அந்த வேண்டுகோளைப் பற்றி உதயணன் தீர்மானமான ஒர் எண்ணங் கொள்ள இயலவில்லை. காமன் கோட்டத்தினுள் பதுமையைத் தான் சந்தித்ததும் அங்கு மணவறை மாடத்தில் அவளோடு பழகியதும் எப்படியாவது தருசகனுக்குத் தெரிந்து விட்டதோ? என்றும், ‘மணந்து கொள்ளவேண்டும், என்று எண்ணி வந்த கேகயராசனோ இறந்து போனான். இனிப் பதுமையை உதயணனுக்குத்தான் மணம் செய்து வைப்போமே என்று அலட்சியமாகக் கருதித் தருசகன் இப்படிச் செய்தானோ?’ என்றும் பலப்பல விதங்களாகத் தனது சிந்தனையை ஓட விட்டுக் கொண்டிருந்தான் உதயணன். இத்தனை சிந்தனைகளுக்கும் இடையில் அவனுக்கு ஒரு விதமான மகிழ்ச்சியும் இருந்தது. அது பதுமை தனக்குக் கிடைக்கப் போகிறாள் என்ற மகிழ்ச்சிதான்!

தனிமையிலே கண்டு பழகிக் காதல் கொண்டு தான் விரும்பிய பதுமையே தன்னை வந்து சேரப்போகிறாள் என்று எண்ணும்போது அது முன்செய்த பெருந்தவத்தின் விளைவோ என்று தோன்றியது உதயணனுக்கு. உள்ளுற அளவற்ற களிப்பு. ஆனால், அந்த மகிழ்ச்சியைப் புறத்தே தெரியாமல் மறைத்துக் கொண்டான் அவன். தருசகன் கூறி அனுப்பிய செய்தியிலே தனக்கு விருப்பம் இருந்தும், இல்லாததுபோலத் தன் எதிரில் இருக்கும் அமைச்சனிடம் நடிக்கலானான் உதயணன். சம்மதத்திற்குரிய செய்தியே ஆனாலும், எடுத்த எடுப்பில் அமைச்சனிடம் தன் இசைவைக்