பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

“அரசே! தாங்கள் எல்லா விதத்திலும் ஒப்புயர்வற்ற மறக்குடியிலே தோன்றிய பேரரசர். இவ்வாறு நெஞ்சம் கலங்குதல் தங்கள் போன்றோர்க்கு அழகன்று. நீங்கள் எம் அரசனின் இந்த வேண்டுகோளை எவ்வாறேனும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்” என்று மீண்டும் வேண்டினான் அமைச்சன். “பேரரசனாகிய தருசகராசனும், உங்களைப் போன்ற அறிவுத் துறையில் தலைசிறந்த அமைச்சரும், இப்படி என்னிடம் வேண்டும்போது, இனியும் நான் மறுப்பது நன்றாக இருக்காது. உங்கள் கருத்திற்கு இசைவு தராவிடில், வீணாக உங்களுக்கு மனக் கலக்கத்தைக் கொடுப்பதற்கு நான் காரணம் ஆவேன். அவ்வாறு உங்களைக் கலக்கப்படுத்தும் எண்ணம் எனக்குச் சிறிதளவும் இல்லை. ஆகையால் நான் இசைந்துதான் ஆகவேண்டும்போல் இருக்கிறது” என்று மனக்கருத்து இல்லாமல் ஏனோதானோ என்று சம்மதிப் பவனைப் போலத் தன் சம்மதத்தைக் கூறி நிறுத்தினான் உதயணன்.

49. இசைச்சன் திருமணம்

துமையை மணந்துகொள்ள, உதயணன் இணங்கினான் என்பதை அறிந்தபின்பு தருசகனின் அமைச்சன் மேலும் பலவாறு அவனிடம் தொடர்ந்து கூறி, அவன் இசைவை ஒருவாறு உறுதியாய்ப் பெற்றுக்கொண்டு சென்றான். தருசகனை நோக்கிப் புறப்பட்ட அவன், ‘முடிப்பதற்கு அருமையான செயலை இன்று நம்மால் நிறைவேற்ற முடிந்ததே என்ற மனநிறைவோடு சென்றான். அமைச்சன் வெளியேறியதும் உதயணன், தன் நடிப்பை எண்ணிக் கொண்டு நண்பர்களை நோக்கித் தானாகவே சிரித்தான். நண்பர்களும் அதுவரை அடக்கிக் கொண்டிருந்த சிரிப்பை வெளிப்படுத்தினர். மகத மன்னனோடு உதயணனுக்கு நெருங்கிய உறவை ஏற்படுத்தி, அவனது அரசியல் வன்மையைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தானே அவர்கள் இராசகிரிய நகரத்திற்கே வந்திருந்தார்கள்!