பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பட்டிருப்பாய்! அன்று உன்னாலேதான் நளகிரியின் மதத்தை உதயணன் அடக்கினான். இன்று உன்னால்தான் என் வேண்டுகோளை உதயணன் ஒப்புக்கொள்ள வேண்டும். தத்தைக்கு வீணை கற்பிக்க ஏற்ற ஆசிரியன் அகப்படாமல் யானும் அவள் தாயும் பல நாள்கள் வருந்தியதுண்டு. அந்த வருத்தம் இனி உதயணனால் தீர்ந்துபோகும் என்று நம்புகிறேன். என் நம்பிக்கையின் வெற்றியும் தோல்வியும், நீ உதயணனிடம் பேசி அவனைச் சம்மதிக்கச் செய்வதைப் பொறுத்தது! உதயணன் ஒரு பேரரசன் மகனாயினும், என் பொருட்டு இதை நிறைவேற்றுவதில் இழுக்கு நோக்கமாட்டான் என்று எண்ணுகிறேன். நீதான் இதை அவனிடமுரைத்து உடன்பாடு பெற்று வரவேண்டும்” என்று தன் மந்திரிகளுள் ஒருவனாகிய சிவேதனைப் பிரச்சோதனன் வேண்டிக் கொண்டான். இவ்வாறு கருதி வேண்டிய பிரச்சோதனன் உள்ளூற வேறோர் எண்ணத்துடன் இதைச் செய்தான். உதயணனை மீண்டும் கௌசாம்பி நகரமோ, வைசாலி நகரமோ செல்லவிடாமல் உச்சயினியிலேயே இருக்கச் செய்துவிட வேண்டும் என்பது தான் அந்த எண்ணம். இத்தகைய அருங்கலைச் செல்வனொருவனை வெளியே விட்டுவிட அவனுக்கு விருப்பமில்லை. தத்தைக்கு வீணை கற்பிக்குமுகமாக உதயணனை உச்சயினியிலேயே மடக்கிவிடலாம் என்று தீர்மானம் செய்தான். அந்தத் தீர்மானமே இந்த வேண்டுகோள் வடிவாக வெளிப்பட்டது.

அரண்மனையில் பிரச்சோதனன் போனபின்பும் காத்திருந்த உதயணன், சிவேதன் உட்புறமிருந்து வருவதைக் கண்டு வரவேற்றான். இருவரும் தத்தம் நலங்களைப் பற்றியறிந்து அளவளாவி முடிந்தபின் உதயணனிடம் சிவேதன் தன்னுடைய அரசனின் விருப்பத்தை மெல்லத் தெரிவிக்க ஆரம்பித்தான். சிவேதன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உதயணனை வேதனை செய்தது. பிரச்சோதன மன்னனின் வேண்டுகோளைப் புரிந்துகொள்ளாமல் அவன் தவித்தான். தானும் ஓரரசன் என்றறிந்தும் பணியாளனாக அமர்த்திக் கொள்வதுபோல மகளுக்கு வீணை கற்பிக்க வேண்டுகிறானே