பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

களிப்போடு ஒப்புக் கொண்டான் தருசகன். “பதுமையின் ஆருயிர்த் தோழியர்களுள் யாப்பியாயினி என்று ஒர் அந்தணக் கன்னி இருக்கிறாள். அவள் ஒழுக்கத்திலும் அழகிலும், குலத்திலும் நீங்கள் கூறம் இசைச்சனுக்கு மிகவும் ஏற்றவளாக இருப்பாள் என்று நான் எண்ணுகிறேன். விரைவில் ஒரு மங்கல நாள் பார்த்து அவளுக்கும் இசைச்சனுக்கும் திருமணத்தை நடத்தியபின் பதுமையின் திருமணத்தைப் பற்றிச் சிந்திப்போம்! இதை நீ சென்று உதயணனிடம் கூறுக” என்று வயந்தகனுக்கு மறுமொழி கூறி அனுப்பினான் தருசக வேந்தன். வயந்தகன் விடை பெற்றுக்கொண்டு சென்றான். அங்கே இருந்து வெளியேறியதும் வயந்தகன் நேரே உதயணன் இருக்கும் இடத்திற்குச் சென்று, யாவற்றையும் அவனிடம் விவரமாகக் கூறினான்.

வயந்தகன் வந்து கூறும்போது மற்ற நண்பர்களும் உதயணனோடு இருந்தனர். உதயணனது இந்த ஏற்பாட்டையும் இதற்குத் தருசகன் சம்மதித்ததையும் அவர்கள் முழு மனத்தோடு வரவேற்றார்கள். அதனோடு அமையாமல் நண்பர்களே ஒன்றுகூடி இசைச்சனுடைய திருமணத்திற்கு ஒரு நல்ல மங்கல நாளையும் குறிப்பிட்டு வைத்துக் கொண்டனர். வயந்தகனுக்கு விடை கொடுத்து அனுப்பியதும் தருசக மன்னன், தன் தாய் சிவமதியைச் சந்திக்க அவள் மாளிகைக்குச் சென்றான். பதுமைக்கும் அவனுக்கும் தாயாகிய அம் மூதாட்டி முதிர்ந்த தளர்ந்த நிலையில் இருந்து வந்தாள். அந்த மாளிகையிலிருந்து வெளியேறவோ, நடமாடவோ முடியாத அவ்வளவு வயது அவளுக்கு. பதுமைக்கும் உதயணனுக்கும் திருமண ஏற்பாடு செய்திருப்பதையும் மற்ற செய்திகளையும் கூறிப் பெற்றவளின் ஆசியை எதிர்பார்த்து அங்கே சென்றான் தருசகன். யாப்பியாயினி, இசைச்சன் திருமணத்தை முதலில் நடத்த வேண்டிய அவசியத்தைப் பற்றியும், அதற்குப்பின் உதயணன், பதுமை திருமணம் நடக்கும் என்பதையும் தாயிடம் தருசகன் எடுத்துக் கூறினான்.