பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதுமையின் பாக்கியம்

265

தன்னைத் தழுவிக் கொண்டதையும், அதனால் ஊடல் தீர்ந்ததையும் - அவளால் எப்படியும் மறுக்க முடியாது என்றெண்ணி அந்த இரகசிய நிகழ்ச்சியையே யாப்பியாயினியிடம் இறுதியில் சொல்லி அனுப்பினான். தான் எழுதிக் கொடுத்திருக்கும் சித்திரக் குறிப்புகளையும் உருவத்தையும் கூட அவள் நம்ப மறுக்கலாம். ஆனால் இறுதியாகக் கூறி விட்டிருக்கும் இந்தச் சம்பவத்தை ஒப்புக்கொண்டு நம்பித் தான் ஆகவேண்டும் என்ற தீர்மானத்தோடு தனியாக யாப்பியாயினியிடம் அதையும் கூறியிருந்தான் உதயணன்.

உதயணன் அளித்த சான்றுகளோடு மீண்டும் யாப்பியாயினி பதுமையின் கன்னிமாடத்துக்குச் சென்றாள். உதயணன் கொடுத்து அனுப்பிய சித்திரங்களை யெல்லாம் கண்டு, ‘இவற்றை எழுதவல்லார் மாணகனை அன்றி வேறெவரும் இல்லை’ என்று பதுமை தனக்குள் எண்ணிக் கொண்டாள். அவன் எழுதிக் கொடுத்திருந்த தனது வடிவத்தைக் கண்டபோது, ‘தன்னோடு நெருங்கிப் பழகிய ஒருவரைத் தவிர வேறு யாரும் அதை அப்படி எழுதியிருக்க இயலாது. அந்த ஒருவர் மாணகனே! எனவே, மாணகனும் உதயணனும் ஒருவராக இருக்கலாம்’ என்று இவ்வாறு நினைவுகள் அவள் உள்ளத்தில் தோன்றினாலும், அதே நெஞ்சத்தின் ஒரு கோடியில் இனம்புரியாத கலக்கமும் ஐயமும் இருந்துகொண்டே அவளை வருத்தின. அந்த வருத்தம் தூண்டிடப் பதுமை மீண்டும் தயக்கத்துடனேயே யாப்பியாயினிக்கு மறுமொழி கூறினாள்.

இந்த மறுமொழியிலும் பதுமையின் பூரண நம்பிக்கைக்கு உரிய எந்த அம்சமும் பிரதிபலிக்கக் காணோம். “தோழீ! இவைகளை எல்லாம் மாணகன் ஒருவன்தான் எழுத முடியும் அதைப் பொறுத்தவரையில் எனக்கும் அவ நம்பிக்கையோ மனவேறுபாடோ சிறிதளவும் கிடையாது. இதோ இந்த உருவங்களையும் குறை சொல்வதற்கு இல்லை. என்னோடு நெருங்கிப் பழகிய காதலர் எழுதியவைதாம் என்பதை மறுக்க முடியாதபடி இவை அமைந்துள்ளன.