பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

ஆயினும் இவற்றை நன்றாக ஆராய்ந்த பின்பல்லாது, இவற்றை நம்பிவிடல் ஆகாது. ஆராயாமல் ஒப்புக்கொள்ள மறுக்கிறது என்மனம்” என்று பதுமை கூறினாள். பதுமையின் இந்த மறுமொழியைக் கேட்ட யாப்பியாயினி அதிர்ச்சி யுற்றாள்.

இவளுக்கு நம்பிக்கை யூட்டுவது அவ்வளவு எளிய காரியமில்லை என்று யாப்பியாயினி நினைத்துக் கொண்டாள். இறுதியாக உதயணன் கூறியனுப்பிய அந்த இரகசியச் செய்தியைக் கேட்ட பின்பாவது பதுமையின் நெஞ்சம் நெகிழ்கின்றதா பார்ப்போம் என்று கருதி அவளை நெருங்கிக்காதருகே அந்தச் செய்தியை மெல்லக் கூறினாள். பதுமையின் அவநம்பிக்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. யாப்பியாயினி கூறிய அந்தச் செய்தியால், அவள் மனத்திலிருந்த சிறிதளவு சந்தேகமும் நீங்கிப் போயிற்று. இறந்துபோன கணவனின் இன்னுயிரைக் கூற்றுவனிடமிருந்து மீண்டும் பெற்றபோது சாவித்திரிக்கு எத்தகைய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமோ அத்தகைய மகிழ்ச்சி பதுமைக்கு இப்போது ஏற்பட்டது. இது வெறும் காதல் மகிழ்ச்சி மட்டும் அல்ல. காதலனின் மாறு வேடத் திறமையை எண்ணிக்களிக்கிற களிப்பும் கலந்த மகிழ்ச்சியாகும்.

மகிழ்ச்சிப் பித்தேறிய பதுமைக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாப்பியாயினியோடு கை கோத்து ஆடினாள். உதயணன் எழுதிக் கொடுத்திருந்த சித்திரங்களை எடுத்து மார்புறத் தழுவிக் கொண்டாள். அந்தச் சித்திரங்களுள் ஒன்றில் உதயணன் பதுமை ஆகிய இருவர் உருவமும் வரையப் பெற்றிருந்தன. அதிலிருந்த உதயணன் வடிவத்தை நோக்கி, “என் நெஞ்சைக் கவர்ந்த காதலரே! நீங்கள் வஞ்சகத்தில் கைதேர்ந்தவராக இருப்பீர்கள் போலத் தெரிகிறதே! மாறுவேடத்தால்தான் இந்தப் பேதையின் நெஞ்சத்தைத் திருட முடியும் என்பது உம் கருத்தோ?” என்று அந்தச் சித்திரத்தோடு நேரில் உரையாடுவது போலப் பேசினாள். பதுமையின் இத்தகைய செயல்களால் அவளது