பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விதி வென்றது

25

என்ற கவலை ஒருபுறம் உதயணனை வாட்டியது. உதயணன் அந்த வேண்டுகோளை ஆராய்வதன் மூலமாகப் பிரச்சோதனனுடைய உள்ளத்தையே ஒருமுறை ஊடுருவிப் பார்த்தான். ஒரு நிலையான காரணம் அவனுக்குத் தென்படவில்லை. ‘என்னுடைய குடி ஒழுக்கம் எத்தகையது என்பதை அறிந்து கொள்ளவா? அல்லது என் கலைவன்மையைப் புகழ் பெறாதபடி ஒடுக்க வேண்டிச் செய்த செயலா? இல்லை என்மேல் இரக்கமுற்றுச் செய்த காரியந்தானா? மனத்தில் எண்ணியது சரியா, தவறா என்று ஆராயாமல் எண்ணியதை எண்ணியபடியே செய்வதுதான் பேரரசர்களுடைய இயல்போ? எதற்காக இவன் எனக்கு இந்த ஆணையிடுகிறான்? இவன் மகளுக்கு நான் ஆசிரியனாக இருந்து யாழ் கற்பிக்க வேண்டுமாமே? யார் அந்தப் புண்ணியவதி? ஒருவேளை அன்று நாம் புவிமுக மாடத்தில் கண்ட காரிகை தானோ? இல்லை இவனுடைய பல பெண்களில் வேறொரு பெண்ணாகவும் இருக்கலாம். இந்தச் சிவேதனிடம் இதை வாய்விட்டுக் கேட்பது நாகரிகமல்ல. எப்படியாயினும் இங்கு யாழ் கற்பிப்பது மூலமாக அவளை நான் சந்திக்க ஒரு வாய்ப்பையாவது ஏற்படுத்திக் கொள்ளலாம். என்னிடம் யாழ் கற்கப்போவது யாராயினும் என் உள்ளங்கவர்ந்த அந்தப்பெண் அங்கே எப்போதாவது தட்டுப்படாமலா போய் விடுவாள்? அவளை மீண்டும் சந்திக்காமல் என்னால் உயிர் வாழ முடியாது. அவளைச் சந்திக்க வேண்டுமானால் இதற்கு ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். உயிர் கெடவிருக்கும் நிலையில் ஒழுக்கம் பார்த்துக் கொண்டிருப்பது தகாது. நான் எப்படியும் இதற்கு உடன்பட்டே ஆகவேண்டும். இவ்வாறு உதயணன் மனத்தில் எண்ணங்கள் விரைந்து எழுந்தன. உதயணன் சிவேதனிடம் யாழ்கற்பிக்க உடன்பட்டான். சிவேதன் நன்றியோடு விடைபெற்றுச் சென்று உதயணன் யாழ் கற்பிக்க இணங்கிய செய்தியை அரசனுக்கு உரைத்தான்.

அரசன் வாசவதத்தையை மனத்திற் கருதியே உதயணனை யாழ் கற்பிக்க அழைத்தான். எனினும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. எனவே தன்னுடைய