பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

உரையாடும் சந்தர்ப்பம் ஒன்று அவனுக்கு ஏற்பட்டது. அப்போது உருமண்ணுவாவை விடுவித்துக் கொண்டு வர வேண்டிய அவசியத்தைப் பற்றிக் குறிப்பாகத் தருசகனிடம் கூறினான் அவன். தருசகனும் அதை உணர்ந்துகொண்டு உருமண்ணுவாவை விடுவிக்கத் தன்னால் இயன்றவரை முயல்வதாக ஒப்புக் கொண்டான்.

உதயணனுடைய இந்த வேண்டுகோளைக் கேட்டபின், தருசகனுக்குத் தனிமையில் உதயணனைப் பற்றிச் சிந்திக்க அவகாசம் ஏற்பட்டது, உதயணன் எதிர்பாராத விதமாக வந்து தனக்கு உதவிசெய்து தன்னோடு பழகியதிலிருந்து பதுமைக்கும் அவனுக்கும் திருமணம் நடந்ததுவரை யாவற்றையும் ஒருமுறை ஆழ்ந்து எண்ணிப்பார்த்தான். அதன் விளைவாக உதயணனின் அப்போதுள்ள நிலை, இவன் நாடு பிறருடைய கையில் இருப்பது ஆகிய எல்லாம் தருசகனுக்கு நினைவு வந்தன. உதயணனுக்கு தன்னால் எந்த வகையில் எல்லாம் உதவி செய்ய முடியுமோ, அந்த வகையில் எல்லாம் உதவி செய்து அவனை உயர்வுறச் செய்ய வேண்டிய உறவு முறையும் கடமையும் இப்போது தனக்கு இருப்பதைத் தருசகன் உணர்ந்தான்.

‘பாஞ்சால ராசனாகிய ஆருணி, உதயணன் இல்லாத நேரத்தில் அவனுடைய சோர்வைப் பயன்படுத்திக்கொண்டு அவன் நாட்டைக் கைப்பற்றி ஆண்டு வருகிறான். அவனிடமிருந்து நாட்டை மீட்டு உதயணனுக்கு அளிக்க வேண்டும். நமக்கு உதயணன் செய்திருக்கும் கைம்மாறு கருதாத பேருதவிக்கும் நம் தங்கையை மறுக்காமல் மணம்புரிந்து கொண்டதற்கும் நாம் அவனுக்குப் பட்டிருக்கும் நன்றிக் கடன் மிகப் பெரியது’ என்று உதயணனுக்கு உதவும் ஆர்வமும் நன்றியும் தருசகன் உள்ளத்தில் பெருகி வளர்ந்தன. இத்தகைய தனிமைச் சிந்தனையின் முடிவாகத் தருசகன், உதயணன் நாட்டை அவன் திரும்பவும் பெறுவதற்கு உடனடியாக ஓர் ஏற்பாட்டைச் செய்ய முற்பட்டான். தன் அமைச்சர்களில் சிறந்தவர்களாகிய, வருடகாரன், தாரகாரி,