பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தம்பியர் வரவு

271

அரசனை நீ அழைத்தாலும், அவன் மறுக்காமல் முன் வந்து, உனக்கு உதவி செய்வான். நீயும் என் அமைச்சர்களும் தவிரப் பிறருடைய தொடர்பை இதில் ஏற்படுத்திக் கொள்வதனால் பல துன்பங்கள் விளையலாம். எனவே போர் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஆலோசிக்கும் போதோ, திட்டம் இடும் போதோ நீயும் அமைச்சர்களும் மட்டுமே தனிமையில் கலந்து பேச வேண்டும். உனக்கு வெற்றி எய்துவது உறுதி! எல்லாம் நலமாக முடியவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்” என்று உதயணனுக்கு வாழ்த்துக் கூறினான் தருசகன். “தாங்கள் கூறிய வாழ்த்துக்கும் யோசனைகளுக்கும் என் நன்றி! எல்லாம் தாங்கள் கூறியவாறே இனிது நிகழும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. அவசியமானால் தங்களையோ பிரச்சோதன மன்னரையோ நேரில் உதவிக்கு அழைப்பேன். நிற்க இது வேறோர் செய்தி! அதை மீண்டும் தங்களுக்கு நினைவூட்டித் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். நான் இங்கு வந்தது, அரிய சந்தர்ப்பத்தில் தங்களுக்கு உதவ நேர்ந்தது, தங்கள் தங்கையை மணம் புரிந்துகொண்டது ஆகிய இவை யாவற்றிற்கும் மூல காரணமாக இருந்தவன் என் அருமை நண்பன் உருமண்ணுவாவே! நான் பதுமையை மணஞ் செய்துகொண்ட மகிழ்ச்சியை உணரவே முடியாமல், என் மனத்தில் உருமண்ணுவாவைப் பற்றிய துன்பநினைவுகள் தடை செய்கின்றன. உருமண்ணுவாவை எப்படியும் இன்னும் பத்துப் பதினைந்து நாள்களுக்குள் எலிச்செவி அரசனிடமிருந்து விடுதலை செய்து அனுப்ப வேண்டியது உங்கள் பொறுப்பு. உருமண்ணுவா விடுதலையானால் ஒழிய, நான் என்னுடைய திருமண இன்பத்தை நினைக்கவும் வழியில்லை. இதை நீங்கள் எனக்காக விரைவில் செய்தாக வேண்டும்” என்று கூறித் தருசக வேந்தனிடம் தனக்கு விடையளிக்குமாறு கேட்டுக் கொண்டான் உதயணன். தருசகனும் அவ்வாறே செய்து உருமண்ணுவாவை விடுவிப்பதாக வாக்களித்து உதயணனுக்கு விடை கொடுத்து அனுப்பினான். தனக்கென்று இருந்த உரிமைப் படைவீரர்களும் வேறோர் சிறு