பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

படையும் பின்பற்றிவர, உதயணன் கோசாம்பி நகரத்தை நோக்கிச் சென்றான். ‘உதயணன் படைகளோடு புறப்பட்டு விட்டானே! இனி எந்த அரசனின் முடிவுக்கு ஆபத்தோ?’ என்று எண்ணிப் பிறவேந்தர் பேதுற்றனர்.

தருசகன் அனுப்பிய மகத நாட்டுப் படைவீரர்களோடு அமைச்சர்கள் நால்வரும் முதன்மை வைத்து முன்செல்ல, உதயணனும் அவனுடன் சென்ற சிறு படையும் பின்பற்றித் தொடர்ந்து செல்லலாயினர். இராசகிரிய நகரத்தில் நிகழ்ச்சிகள் இவ்வாறு இருக்கும் நிலையில், அங்கிருந்து சில நாளைக்கு முன்பே வேறு ஒரு முக்கியமான செயல் நிமித்தம் வெளியேறிச் சென்றிருந்தான் வயந்தகன். மறைவாக இருக்கும் யூகியிடமிருந்து செய்தி பெற்று வரவே அவன் வெளியேறினான். யாப்பியாயினியின் திருமணம் முடிந்த பின் இரண்டோர் நாட்களில் வெளியேறிய அவனுக்கு, யூகியை அடைவதற்கு முன்பாகவே அவன் அனுப்பிய ஓலை நடுவழியிலேயே கிடைத்துவிட்டது. .

உருமண்ணுவா போரிற் சிறைப்பட்ட பின் வயந்தகனுடைய பொறுப்பு அதிகமாகி இருந்தது. அவ்வப்போது யூகி கூறியனுப்பும் திட்டங்களை அறிந்தும், இங்கே உதயணனைக் கவனித்துக் கொண்டு இருபுறமும் செயலாற்றி வந்தான் அவன். யூகி அந்தத் தடவை அவனுக்கு அனுப்பி யிருந்த ஓலையில், பாஞ்சால வேந்தன் ஆருணிமீது படை யெடுப்பதற்கு அதுவே ஏற்ற சமயம் என்றும், உதயணனுடைய தம்பியர்களாகிய பிங்கல கடகர்களும் இதே நோக்கத்தோடு தாமாகத் திரட்டிய ஒரு படையுடன் இன்ன இடத்தில் இருக்கிறார்கள் என்றும், இந்தப் படையெடுப்பை ஆதரித்து அவர்களும் உதயணனோடு வந்து கலந்து கொள்வார்கள் என்றும் எழுதியிருந்தான். இந்த ஓலையைப் படித்தவுடன்தான் உதயணனைச் சந்திக்கக் கிளம்பினான் வயந்தகன். உதயணனோடு அவன் தம்பியரையும் ஒன்று சேர்த்து வைக்கும் வேலையைத் தன் ஓலைமூலம் வயந்தகனுக்கு யூகி கொடுத்திருந்தான்.