பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒற்றர் உரைத்தவை

277

விதமாகப் பொங்கிக் கரையருகே உள்ள ஊர்களை அழிக்கும் கடலைப் போல அமைதியான துயிலில் ஆழ்ந்திருக்கும் அரண்மனையிற் கலகம் புரிந்து குழப்பத்தை விளைவிக்க வேண்டும்! அதே நேரத்தில் தாங்கள் கோட்டைக்கு வெளியே போருக்கு ஆயத்தமாக அணிவகுத்த படைகளோடு காத்திருப்பது அவசியம். உள்ளே புகுத்த வீரர்கள் இரவோடிரவாக அரண்மனையிலும், போர் வீரர்கள் வசிக்கும் படைச் சாலைகளிலும் எவ்வளவு அழிவு செய்ய முடிகிறதோ அவ்வளவு அழிவைத் தங்கள் கலகத்தின்மூலம் செய்வார்கள். இன்னும் ஒரு செய்தி! கோட்டைக்குள் இருக்கும் மக்கள் யாவரும் தங்கள் பழை மன்னனாகிய உங்கள்மேல்தான் அந்தரங்கமான பற்றும் விருப்பமும் கொண்டிருக்கிறார்கள். ஆருணி, வன்முறை ஆட்சியால் அவர்களை அடக்கி ஆண்டு வருகிறான். நம் வீரர்கள், ‘உதயணன் வாழ்க’ என்ற வாழ்த்தொலி மூலம் தங்கள் வரவைக் கோசாம்பி நகர மக்களுக்குத் தெரிவித்தால், அவர்கள் ஆதரவும் நமக்குக் கிடைக்கும். இவற்றையெல்லாம் திட்டம் பிறழாமல் நாம் செய்து முடித்தால், ஆருணிக்கு அதோ கதிதான். இருளில் பெரிய மழையிலே தனியாக அகப்பட்டுக் கொண்ட ஆண் குரங்கைப் போலத் திகைத்துத் திண்டாடுவான் அவன். நகர மக்கள் நமது வரவைத் தெரிந்துகொண்டு விட்டால் நம்மைப் பாராட்டி வாழ்த்தி வரவேற்பர். அவர்களாகவே ஒருபடை போலத் திரண்டு நம்மோடு வந்து சேர்ந்து கொள்ளுவார்கள். இந்தத் திட்டத்தை நீங்கள் ஒப்புக் கொண்டால், ஆருணியைத் தோல்வியுறச் செய்து சுலபமாக அவன் உயிரையும் வாங்கி விடலாம்” என்று இவ்வாறு தான் கருதிய வழியைக் கூறி முடித்தான் வருடகாரன்.

வருடகாரன் கூறிய இந்தத் திட்டம் இடவகனுக்கும் உதயணனுக்கும் பொருத்தமுடையதாகவே தோன்றியது. அவ்வாறே செய்ய உடன்பட்டு வருடகாரனைப் பாராட்டி நன்றி கூறினான் உதயணன். மேலே நடத்த வேண்டிய செயல்களை ஒரு பளிங்கு அறைக்குச் சென்று மிக இரகசிய