பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

போருக்கு வருகிறான். நீயும் உன் படையோடு எனக்குத் துணையாக இங்கே கோசாம்பி நகரத்துக்கு வந்து சேர்க!” என்று பிரச்சோதன மன்னனுக்கும், ‘இராசகிரிய நகரத்தில் உங்களைச் சூழ்ச்சியால் வென்ற உதயணன் இங்கே என்மீது படையெடுத்து வருகின்றான். துணையாக நீங்களும் வந்து, என் பக்கம் சேர்ந்தால் அவனை இங்கே அழித்து விடலாம்’ என்று வேசாலி, எலிச்செவி முதலிய சங்க மன்னர்களுக்கும், அவசரமாகத் திருமுகங்கள் அனுப்பியிருக்கிறான் ஆருணி. அன்றியும் மகத மன்னன் தருசகன், நமக்குத் துணையாக இருக்கிறான் என்ற செய்தியையும் ஆருணி எவ்வாறோ அறிந்து கொண்டிருக்கின்றான். அதனால், ‘உதயணனுக்குத் துணை செய்வதை உடனே நிறுத்திவிட்டு என்னோடு சேர்ந்து கொண்டால் உனக்கு நீ வேண்டும் பொருளைக் கைம்மாறாக வழங்குகிறேன்’ என்று பொருளாசையைக் காட்டித் தருசக மன்னனுக்கும் ஆருணி ஒரு திருமுகம் அனுப்பியிருக்கிறான். திருமுகம் போதாதென்று மகத மன்னனோடு நன்கு பழக்கமுள்ள நண்பர் சிலரை மகத நாட்டுத் தலைநகருக்குத் தூது அனுப்பியிருப்பதாகவும் தெரிகின்றது” என்று ஒற்றர்கள் உதயணனிடம் வந்து தெரிவித்தனர்.

53. புதியதொரு சூழ்ச்சி

ற்றர்கள் சமயமறிந்து தெரிந்து வந்து உரைத்த மேற்கூறிய செய்திகள் உதயணனுக்குப் பெரிதும் பயன்பட்டன. மதிநுட்பமுள்ள எந்த அரசனும், ஒற்றர்கள் தனக்கு மிகவும் வேண்டியவர்களே ஆனாலும் அவர்கள் கூறுவதை அப்படியே நம்பிவிடுதல் கூடாது. உதயணன் தன்னைத் தவிரப் பிறர் யாருக்கும் தெரியாதவாறு வேறு சில ஒற்றர்களையும் ஆருணியின் கோட்டைக்கு அனுப்பியிருந்தான். அந்த ஒற்றர்கள் செல்வது இந்த ஒற்றர்களுக்குத் தெரியாது. இந்த ஒற்றர்களைப் பற்றி அந்த ஒற்றர்களுக்குத் தெரியாது. தனியே அவர்களையும் அழைத்துக் கேட்டபின் இருவர் கூறியதும் ஒத்திருந்தது கண்டு, அதன் பின்பே இவை