பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

திறன்மிக்க செயலாற்றலைக் கொண்டுதான் வெற்றிபெற வேண்டும். இப்போதே இந்த நொடியிலிருந்து நீ என்னுடைய பகைவனாக மாறி நடித்தால், ஆருணியின் நட்பு எளிதில் உனக்குக் கிடைத்துவிடும். பகையாளி குடியை உறவாடித்தான் கெடுக்க வேண்டும். நம்மைச் சேர்ந்தவர்கள் கூட நீ உண்மையாகவே எனக்குப் பகைவனாக மாறிவிட்டாய் என்று நம்பிவிடுமாறு அவ்வளவு பொருத்தமாக இந்தச் சூழ்ச்சியை நீ ஏற்று நடிக்க வேண்டும்! ஆருணிக்கு வேண்டியவர்களை ஒருவர் விடாமல் நீ சந்தித்து என்னை வெறுத்துப் பேசி ‘ஆருணியோடு இப்போதே நான் சேர்ந்து கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்’ என்று கூறி, அவர்கள் ஆதரவை முதலில் பெற்றுக்கொள். ஆருணியோடு உனக்கு உறவு ஏற்படுத்திக் கொள்வதற்கு இதுவே தகுந்த வழி. அவர்களிடம் எப்போதும் என்னைப் பற்றி இகழ்ந்தே பேசிக்கொண்டிருக்க வேண்டும். ‘உதயணனுக்குத் தன் புகழைப் பேணும் விருப்பமே இல்லை. போர் செய்வதற்கு ஆசையோ, ஆற்றலோ அவனிடம் இப்போது கிடையாது. ஏதோ மகத மன்னனுடைய வார்த்தையைத் தட்ட முடியாமல் இங்கே படையெடுத்து வந்திருக்கிறான். உறுதியாக இப்போது அவன் சிறிதும் ஆற்றல் இல்லாதவனாகவே இருக்கிறான்’ என்று என்னைப் பற்றிப் பலவாறாகக் கூறி இகழ்ந்து பேசு. பின்பு அவர்கள் மூலம் ஆருணியை நண்பனாக அடைந்து, எனக்கு அஞ்சி அவன் புதிய புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதபடி என்னைப் பற்றி அவனிடம் எளிமையாகச் சொல். இவ்வாறு நீ சொல்வதனால் ஆருணி புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைப்பதோடு வேறு அரசர்களைத் துணைக்கு அழைத்தலையும் நிறுத்திவிட்டு, முன்பிருந்தே எனக்கு அஞ்சி வந்தததற்கு எண்ணி நாணி எப்போதும்போல இயல்பாக இருக்கத் தொடங்குவான். நான் இப்போது பலத்தில் குறைந்தவனாக இருக்கிறேன் என்று ஆருணியை நம்பும்படி செய். அதற்குமேல் என்ன செய்து அவனை எப்படி வெல்வது என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று உதயணன் கூறி முடித்தான்.