பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதியதொரு சூழ்ச்சி

283

வருடகாரன் மனத்திற்கும் இந்த ஏற்பாடு சரி என்றே தோன்றியது. “தாங்கள் கூறியபடியே சூழ்ச்சி புரிகிறேன். எல்லாம் நம்முடைய வெற்றிக்கு ஏற்றபடி நடக்க என்னால் இயன்ற மட்டும் செயல் புரிய முற்படுகிறேன்” என்று கூறி விட்டுப் புறப்பட்டான் வருடகாரன், வருடகாரன் கோசாம்பி நகரத்துக் கோட்டைக்குள் செல்வதற்குமுன் தன்னைச் சேர்ந்த படை வீரர்களில் நம்பிக்கை வாய்ந்த சிலரை அழைத்து, “உதயணனுக்கு எந்தவிதமான அல்லலும் ஏற்படாமல், இரவோ பகலோ, எந்த நேரமும் காத்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று கூறிவிட்டுச் சென்றான். தான் அருகில் இல்லாத நேரத்தில் ‘எவர் செய்யும் சூழ்ச்சிக்காவது உதயணன் ஆட்பட்டுவிடக் கூடாதே!’ என்று வருடகாரனுக்கு ஓர் அச்சம். கோட்டைக்குள் சென்ற வருடகாரன், முதல் தந்திரமாக ஆருணியின் சேனாபதி மகனைத் தன்னுடைய நெருக்கமான நண்பனாகச் செய்து கொண்டான். இளைஞனாகிய சேனாபதி மகன் மூலம், அவனுக்குப் பல இரகசியச் செய்திகள் தெரியலாயின. தான் உதயணனை வெறுத்து அவனோடு கடும்பகை கொண்டிருப்பதாக வருடகாரன் அங்கே கூறியிருந்ததனால், ஒருநாள் அவன் எதிர்பார்த்த விளைவு அவனைத் தேடிவந்தது. “எங்கள் அரசன் ஆருணியோடு நீ சேர்ந்து கொள்வதாக இருந்தால், உனக்கு எவ்வளவோ பயன்கள் எய்தும்! இருநூறு யானையும் ஐந்து தேரும், இன்னும் பல பெரிய சிறப்புக்களும் உனக்குக் கிடைக்குமாறு செய்வேன் நான்” என்று சேனாபதி மகன் வருடகாரனிடம் கூறினான். அவன் வேண்டுகோளுக்கு உடன்படுவது தன் காரியத்திற்கும் சாதகமாக அமையும்போலத் தோன்றியது வருடகாரனுக்கு. எனவே அவன் சேனாதிபதி மகனிடம் தான் அதற்குச் சம்மதிப்பதாகவும், தன் சம்மதத்தை அரசனிடம் சென்று கூறிவிடுமாறும் கேட்டுக்கொண்டான். உடனே சேனாபதி மகன் மகிழ்ச்சியோடு ஆருணியைக் காணச் சென்றான்.

வருடகாரன் தங்கள் பக்கம் சேரச் சம்மதிப்பதாக ஆருணியிடம் கூறிவிட்டு, அதனால் தங்களுக்கு என்னென்ன