பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரை விலகியது

27

ஆசிரியனை வணங்கிப் பெரிதும் பயபக்தியுடன் கற்றல் கலைமரபு. இதற்குள் சிலர் சென்று, கற்பிக்கும் ஆசிரியனாகிய உதயணனை மரியாதைகளுடன் அழைத்து வந்தனர். உதயணன் திரைக்கு இந்தப் புறம் ஆசிரியருக்கென இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான். திரை இரண்டு உள்ளங்களின் வேகத்தைத் தாங்கிக்கொண்டு இடையே நின்றது. தனக்கு யாழ் கற்பிக்க இருப்பவன், அன்று புலிமுக மாடத்திலிருந்து தான் யானை மேற்கண்ட இளைஞனே எனத் தத்தை அறியாள். தான் கற்பிக்க வேண்டியவள், அன்று தன் உள்ளங்கவர்ந்த கன்னியாகவே இருப்பாள் என்று உதயணனும் அறியான். இருவர் அறியாமையும் உந்தி நிற்கும் ஆவலின் தாக்குதலை அந்த மெல்லிய பட்டுத்திரை எவ்வளவு நேரந்தான் தாங்கும்? ஆசிரியனையும் மாணவியையும் அதிக நேரம் சோதனை செய்வதற்குத் தத்தையின் தோழிகளே விரும்பவில்லை போலும்,


‘ஆசிரியனிடம் கற்பதற்குமுன் அவனை மனப்பூர்வமாக வணங்கவேண்டியது மாணவர் கடமை. அதை மறவாது நீயும் செய்க’ என்று கூறித் தோழியர் திரையை விலக்கினர். தன் காந்தள் போன்ற மெல்லிய விரல்களைக் கமலமலர் குவிந்தது போலக் கூப்பி வணங்கிவிட்டுத் தலை நிமிர்ந்தாள் தத்தை. எதிரே அன்று நெஞ்சைக் கவர்ந்து சென்ற கள்வன் வியப்புடன் தன்னையே கண்களால் பருகிவிடுவதுபோலப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவள் தலைகுனிந்தாள். முதலில் விலகியது பட்டுத்திரை. இப்போது இரண்டு உள்ளங்களிலுமிருந்த சந்தேகத்திரைகளும் விலகின. தத்தையாக அவளை அறிந்தான் உதயணன். உதயணனாக அவனை அறிந்தாள் தத்தை. இருவருக்கும் இடையிலிருந்த யாழினின்றும் இன்னும் இசை எழவில்லை. இருவர் மன யாழிலிருந்தும் இனிய அன்புப் பண் ஒலிப்பதை இருவருமே அறிந்து கொண்டனர். கண் மூடித் திறப்பதற்குள் இந்த அறிமுகத்தால் ஏற்பட்ட வியப்பு நாடகம், சில கணங்களில் முடிந்தது.