பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

போரை எதிர்நோக்கிப் படையோடு வந்து தங்கிக் காத்திருக்கும் உதயணனுக்குக் கந்தவதி நதியின் சங்கம முகத்திலிருந்து வருடகாரன் அனுப்பிய செய்தி விரைவிற் கிடைத்தது. அதையறிந்த உதயணன் தன் படைகளை அதற்கு ஏற்றபடி அணி வகுத்துத் தனித்தனியே மலை இடுக்குகளிலே நிறுத்தி வைத்தான். மகத நாட்டிலிருந்து வருடகாரனைப் போலவே தருசகனால் தன்னுடன் அனுப்பப்பட்டிருந்த தருமதத்தன் என்னும் திறமை வாய்ந்த தளபதியை மலைத்தொடரின் நுழைவாயிலிலே படைகளோடு மறைவாக இருக்கும்படி செய்தான். அங்கங்கே மறைவான புதர்களிலே பகைவர்களை அவர்கள் கண்ணுக்குத் தெரியாமலே சூறையாடுவதற்காகப் பல வாட்படை வீரர்களைத் தொகையாக மறைந்து இருக்கச் செய்தான்.

வருடகாரன் என்ற பாகனால் தந்திரமாகத் துரத்திக் கொண்டு வரப்படுகின்ற ஆருணி என்னும் மதயானையைப் பிடிப்பதற்குரிய இவ்வளவு ஏற்பாடுகளையும் உதயணன் முன்னேற்பாட்டுடனும் கவனத்துடனும் செய்து வைத்துக் கொண்டான். இங்கே இவ்வாறிருக்க நதிக்கரையில் வருடகாரனின் விருப்பப்படி படைகளைத் தனித்தனிக் குழுவாகப் பிரிக்கச் சம்மதித்த ஆருணி, மகிழ்ச்சியோடு அவன் கூறும் ஒவ்வொரு செயலுக்கும் ஒப்புதல் கொடுத்துக் கொண்டிருந்தான். ‘கெடுமதி கண்ணுக்குத் தெரியாது’ என்ற நிலையில் இருந்தான் அவன். படைகள் புறப்படுவதற்கு முன்னால் பல தீய நிமித்தங்கள் உண்டாயின. ஆருணியின் படையைச் சேர்ந்த மந்தரம் என்ற யானைக்கு மதம் பிடித்து அது தறிகெட்டு ஓடியது. படையினரைச் சேர்ந்த சில முரசங்கள், சில முறை அடித்ததுமே தோல் கிழிந்து கெட்டுப் போயின. கொடிகள் அடிக்கடி நிலை சாய்ந்து மண்ணில் வீழ்ந்தன. ஓர் அரசன் தன் படைகளோடு போருக்குப் புறப்படும் நேரத்தில் யானை தறிகெட்டு ஓடுவதும், வெற்றியை முழக்க வேண்டிய மங்கலமான முரசங்கள் தோல் கிழிவதும், கம்பீரமாக வீசிப் பறக்க வேண்டிய கொடிகள் கால் இற்றுத் தரையிலே