பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றி முழக்கம்

293

வளைக்க முற்பட்டான் ஆருணி, வேறுபல வீரர்களுக்குத் தான் ஒருவனாகவே தாக்குதலுக்கு ஈடுகொடுத்துக் கொண்டிருந்த உதயணன், அதோடு இவர்கள் ஐவரும் தன்னை நெருங்குவதையும் சமாளிக்க முயன்றான். நல்லவேளையாக அந்தச் சமயத்தில் உதயணனின் தம்பியராகிய கடக பிங்கலர்கள் அவன் பக்கம் உதவிக்கு வந்து சேர்ந்தனர். கடக பிங்கலர்களின் வாள்வீச்சுக்கு ஆற்றாமல் ஆருணியைச் சேர்ந்த காந்தாரகன் என்ற அரசன் முதல் களப்பலியாகப் போரில் மாண்டு போனான். உடனே ஆருணிக்கு மிகுந்த சினம் மூண்டுவிட்டது.

“ஆருணி பிறந்த நாளும் நட்சத்திரமும் அவன் பிறரை அழிக்கும் வல்லமையையே அவனுக்குக் கொடுப்பவை. பிறரால் அவன் ஒரு நாளும் அழியமாட்டான். அழிக்கவும் முடியாது!” என்று ஆருணி தன்னைப் பற்றித் தானே வஞ்சினங் கூறிவிட்டு ஆத்திரத்தோடு உதயணனை நெருங்கினான். ஆருணி வஞ்சினங் கூறிக்கொண்டே தன் பக்கம் நெருங்குவதைக் கண்டதும் அதுவரை போர் முறை மீறாமல் அமைதியாகப் போரிட்டுக் கொண்டிருந்த உதயணனுக்கு மிகுந்த கோபம் உண்டாகிவிட்டது. உதயணனின் கோபம் ஆருணியைப்போல அவனுடைய கண்களிலே புலனாகவில்லை. கைகளிலே புலாயிற்று. விசித்திரமான வேகத்தோடு சுழன்று சுழன்று மின்னும் அவன் கைவாளிலே புலனாயிற்று.

“ஆருணி! உன் தீய உயிரை உண்ணவேண்டுமென்ற எனது வாளின் ஆசை தணியவேண்டும். அந்த ஆசையை நிறைவேற்றாமல் என் வாளை நான் ஏமாற்றமாட்டேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினான் உதயணன். உதயணன் இவ்வாறு கூறியதைக் கேட்ட ஆருணி, அதுவரை வேலாலும் ஈட்டியாலும் செய்து கொண்டிருந்த தன் போர் முறைகளை நிறுத்திக் கொண்டு. உதயணனைப்போல் ஒரு கையில் வாளும் மற்றொரு கையில் கேடகமும் தாங்கி நேருக்கு நேர் உதயணனை எதிர்ப்பதற்காகத் தன் யானையை முன்னே