பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

செலுத்தினான். உதயணனும் வாளை வீசிச் சுழற்றியவாறே ஆருணியின் யானைக்கு அருகே தன் குதிரையைச் செலுத்தினான்.

பேரரசர்களாகிய இருவர் வாளும் மோதலாயின. இந்தச் சந்தர்ப்பத்தில், “மாற்றரசனாகிய பெருவேந்தன் ஒருவனைக் கொல்லும் வீரப் பெருமையை அடியேனுக்குக் கொடுங்கள் பிரபு! அதை நான் செய்கிறேன்” என்று கூறிக்கொண்டே தருமதத்தன், உதயணன் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான். சிறிது நேரப் போரிலேயே ஆருணி தளர்ந்து சோர்ந்து விட்டான். அதை அவன் துரதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்! அவன் ஏறியிருந்த யானையும் அவன் வசப்படாமல் தட்டுக்கெட்டு விலகிப் போக ஆரம்பித்துவிட்டது. அந்த நேரத்தில் தருமதத்தனுடைய கூரிய வாள் ஆருணியின் மார்பைப் பிளந்தது. ஆருணி விண்ணுலகடைந்தான். வஞ்சினத்தோடு போரில் இறங்கிய அவன் நீண்ட நேர கடினமான போரைக்கூடச் செய்யவில்லை; செய்யவும் முடியவில்லை. விதி அவனை அதற்குள் அழித்துவிட்டது. ஆருணியின் மரணத்திற்குப்பின் மிகக் குறுகிய நேரத்துப் போரிலேயே வெற்றி உதயணனை வந்தடைந்துவிட்டது.

வருடகாரனின் சூழ்ச்சி மிகுந்த உதவிகள்தாம் இவ்வளவிற்கும் காரணம். ஆனால் ஆருணிக்கு அவன் சாகும்வரை ‘வருடகாரன் உதயணனுக்கு எதிராக நடித்துத் தன் பக்கமிருந்தது ஒரு சூழ்ச்சி நாடகம்’ என்ற இரகசியம் தெரியவே தெரியாது. உதயணன் வெற்றியடைந்ததைக் கோசாம்பி நகரம் எங்கும் அறிவிப்பதற்காக யானைமேல் ஒரு வீரனைப் பெரிய முரசு ஒன்றுடனே அமர்த்தி எல்லா இடங்களிலும் அந்த மங்கலச் செய்தியை வெற்றி முழக்கம் செய்து வருமாறு அனுப்பினர் நண்பர். முரசு நகரமெங்கும் வெற்றி முழக்கம் செய்யலாயிற்று. வருடகாரன், தருமதத்தன், தாரகாரி, இடவகன், எல்லோரும் உதயணனோடு வந்து ஒன்று சேர்ந்தபின், ஆருணி தங்கள் பகைவன் ஆனாலும் அவனுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன்களை முறையாகச் செய்துவிட வேண்டு