பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

நகரத்து மக்கள் உன்னை நன்கு அறிவார்கள். நீ வந்திருக்கிறதாகச் செய்தி சொல்லி அனுப்பு. கதவு உடனே திறக்கப் படலாம்” என்று கூறினான். இதைக் கேட்ட இடவகன், உதயணின் இராச முத்திரையோடு கூடிய கொடி முதலிய சின்னங்களைக் கையில் ஏந்திக்கொண்டு கோட்டை மதிற் சுவரில் ஏறி நின்றான். இடவகனை உதயணனின் சின்னங்களோடு மதில்மேலே கண்டதும் கோசாம்பி நகரத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்து, வெற்றி ஆரவாரத்தோடு கோட்டைக் கதவைத் திறந்தனர்:

உதயணனையும் வீரர்களையும் கோசாம்பி நகர மக்கள் முகமலர்ச்சியோடு விரும்பி வரவேற்றுக் கொண்டிருக்கும் போது, ஆருணியைச் சேர்ந்தவனாகிய கும்பன் என்னும் சூழ்ச்சிக்காரன் அங்கங்கே மக்கள் மனங்களை மாற்ற முயன்று கொண்டிருந்தான். உடனே இது தெரிந்த உதயணன் வீரர் ஒடிச்சென்று, “உன் போன்றவர்கள் வேறு யாரேனும் இந்த நகரத்தில் இருந்தால் அவர்களுக்கும் இந்தக் கதிதான்?” என்று கூறி அவனைப் பிடித்துக் கொலை செய்தனர். உதயணன் பழையபடி கோசாம்பி நகரத்து ஆட்சியை மேற்கொண்டதும் அச் செய்தி நாடெங்கும் பிரகடனம் செய்யப்பட்டது. நாடு திருப்தியுற்றது. உதயணன் வெற்றியில் தங்கள் மனத்தின் வெற்றியைக் கண்டனர் மக்கள்.

57. மீண்ட அரசாட்சி

தயணன் கோசாம்பி நகரத்து அரசாட்சியை மீண்டும் பெற்று ஆளத் தொடங்கியது, நாட்டுக் குடி மக்களுக்கும், பிறர்க்கும் அளவற்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது. மக்களுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியைப் போலவே பழம்பெரும் உரிமையாகிய அரசாட்சியை மீண்டும் அடைந்துவிட்டோம் என்ற உவகையும் பெருமிதமும் கொண்டிருந்தான் உதயணன். அவனுடைய அந்த உவகைக்கும் பெருமிதத்துக்குமிடையே நன்றியும் ஒருபுறம் சுரந்து கொண்டிருந்தது. தருசக மன்னனால் தனக்குத் துணை