பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீண்ட அரசாட்சி

299

அளித்துவிட்டு அவர்கள் வசிப்பதற்கும் வேறு இடங்கள் அமைத்துத் தரச் செய்தான் அவன். ஆருணி தனக்குப் பகைவனாக இருந்த குற்றத்திற்காக, அவன் மனைவி மக்களையும் நொந்து போயிருக்கும் இந்த நிலையில் துன்புறுத்துவது முறையல்ல என்று எண்ணியே உதயணன் அவர்களுக்கு இவ்வாறு உதவி செய்து அனுப்பினான். பகைவனுடைய உற்றார் மேலும் இரக்கம் பாராட்டும் அவனது இந்த இயல்பைக் கண்டோர் வியந்து போற்றினர். பின்பு உலாவந்த பெரியோர்களுடனும் அமைச்சர், சுற்றத்தினர், நண்பர் முதலியோர்களுடனும் அரண்மனையினுள்ளே உதயணன் நுழைந்தான்.

உதயணன் ஆட்சிக்கு உட்பட்ட பழைய சிற்றரசர்கள் எல்லாரும், மீண்டும் அவன் நாட்டை ஆளத் தொடங்குவதை அறிந்து மனமகிழ்ச்சியோடு வந்திருந்தனர். நல்ல மங்கல நேரத்தில் அவன் அமைச்சர், நண்பர், பிற அரசியலாளர்கள் சூழ அரியணையில் ஏறி அமர்ந்தான். பருவத்தாலும் அறிவாலும் மூத்த பெரியோர்களும் அறிஞர்களும் அவனைப் பற்பல ஊழிகள் வாழுமாறு வாழ்த்தினர். சிற்றரசர்கள் திறைப் பொருள்களையும் அன்பளிப்புக்களையும் அவனுக்கு அடியுறையாக வழங்கினர். பழைய குடிமக்களில் உதயணனோடு நெருங்கிய தொடர்புடையவர் அவனை வந்து கண்டு வணக்கத்துடனே தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டுச் சென்றனர். முன்பு ஆருணியால் பல வகையிலும் துன்பமுற்றிருந்தவர்கள், உதயணனை நேரிற் கண்டு இனிமேல் தங்களுக்கு எந்நாளும் துன்பமில்லை என்று தெரிவித்து விட்டுச் சென்றனர். சிறையில் ஆருணியால் கைதியாக வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுதலை அடைந்தனர். எங்கும் மகிழ்வும் திருப்தியும் களிப்புடனே கலந்து தென்படலாயின. முன்பு ஆருணியின் ஆட்சிக் காலத்தில் கோசாம்பி நகரத்து மக்கள் அடைந்திருந்த பலவகைத் துன்பங்களைப் படிப்படியாக நீக்கி அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பதைத் தனது முதற் கடமையாகக் கொண்டான் உதயணன்.