பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்றியின் நினைவுச்சின்னம்

301

பட்டோர்க்கும், கண் இழந்தோர்க்கும்கூட இவ் வசதிகள் கிடைத்தன. கலைஞர்கள், கவிஞர்கள் அறிஞர்கள் முதலியோருக்கு அரச போகத்தின் ஆதரவுகளும் சிறப்புகளும் போதும் போதும் என்று மறுக்கும்படி விருப்பத்தோடு மிகுதியாகக் கொடுக்கச் செய்தான் உதயணன். அவனுடைய இத்தகைய அன்பும் ஆதரவும் மிகுந்த செங்கோலாட்சியில் மக்கள் புதியதோர் இன்ப வாழ்வைப் பெற்று அனுபவிக்கத் தொடங்கினார்கள். கூற்றுவனும், நோய் நொடிகளும் ஆகிய இவைகளும்கூடக் கோசாம்பி நகரில் நுழைவதற்கு அஞ்சும்படியானதுபோல அமைந்திருந்தது இந்தப் புதிய நல்லாட்சி. நிலவளமும் நீர்வளமும் சிறக்க, மழை காலந்தவறாமற் பெய்தது. காடும் மலைகளும் பசுமைக் கவினும் வளப் பெருக்கமும் கொண்டு சிறந்து விளங்கின. அரசாட்சி, தாயால் அரவணைக்கப்படும் மக்களின் நிலையினதுபோல் இருந்ததை யாவரும் உணர்ந்தனர்.

58. நன்றியின் நினைவுச் சின்னம்

கோசாம்பி நகரத்து வேளாளப் பெரு மக்கள் விளைநிலங்கள் மிக்க சிற்றுார்களும் பிறவசதிகளும் அடைந்து நலம் பெருக வழி செய்தனர், உதயணன் அமைச்சர். இந்நிலையில் கோசாம்பி நகருக்கு அப்பால் நாட்டின் எல்லைப் புறத்திலுள்ள சில சிற்றரசர்கள், உதயணனுக்கு எதிராக மாறுபட்டுக் கலவரம் செய்தமையால், உதயணன் தன் தம்பியர்களாகிய பிங்கல கடகர்களை ஏற்ற படைகளுடன் அங்கே அனுப்பி வைத்தான். மகத நாட்டிலிருந்து வந்த படைத் தலைவர்கள் விடைபெற்றுச் சென்றிருந்தாலும் மகதவீரர்களிற் பலர் இன்னும் கோசாம்பியிலேயே தங்கியிருந்தனர். அவர்களும் உதவிக்குச் சென்று பிங்கல கடகர்களை வெற்றி முழக்கத்தோடு திரும்பச் செய்தனர். பிங்கல கடகர்கள் எல்லைப் புறத்து அரசர்களை வென்றுவிட்டுத் திரும்பியதும் மகதநாட்டு வீரர்களுக்குத் தக்க சீர் சிறப்புக்களைச் செய்து, அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள்.