பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோடபதி கிடைத்தது

305

சாலை ஒன்று அமைக்கப்பட்டது. கோவிலுக்கு வழிபாடு நடத்துகின்றவர்கட்கும், பிறர்க்கும் அங்கேயே அருகில் இருக்கைகள் கட்டப்பெற்றன. மாதந் தவறாமல் திருவிழாக்கள் நடத்துவதற்குப் போதுமான உடைமைகள் கோவிலுக்கு உரிமை செய்து கொடுக்கப் பெற்றன. சிறந்த முறையில் கடவுள் மங்கலமும் ஒருநாள் செவ்வனே நிகழ்ந்து இனிதாக நிறைவேறியது. பத்திராபதி இனிமேல் தெய்வமாகியது.

59. கோடபதி கிடைத்தது

ன்பமும், துன்பமும் தனித்து வருவதில்லை என்ற முதுமொழி மெய்யாகவே வாழ்வின் அனுபவத்திலிருந்து கனிந்ததாக இருக்க வேண்டும் கோசாம்பி நகரத்து அரசாட்சி மீண்டதிலிருந்து உதயணனது வாழ்வில் இன்பப்படுவதற்குரிய நிகழ்ச்சிகளாகவே தொடர்ந்து நிகழலாயின. இழந்த பொருள்கள் ஒவ்வொன்றாக மீண்டும் மீண்டும் அவனை வந்தடையும் நிகழ்ச்சிகள் தொடங்கின. இன்ப துன்பங்களின் போக்குவரவு என்பது, மனித வாழ்க்கையில் கோடை மழையைப் போன்றது அல்ல. அது கார்காலத்து மழையைப் போன்றதே என்ற சித்தாந்தம் மெய்ப்பிக்கப்படுவது போலச்சென்றது. மேல்வரும் உதயணனின் வாழ்க்கை. பத்திரா பதிக்கும் கோவில் கட்டி முடித்த சில நாள்களில், உஞ்சை நகரத்திலிருந்து வரும்போது, முன்பு உதயணன் இழந்துவிட்ட கோடபதி என்னும் தெய்வீக யாழ் மீண்டும் நல்வினை வசத்தால் அவன் கைக்கே வந்து சேர்ந்தது. அதை உதயணன் திரும்ப அடைந்த வரலாறு ஒரு விந்தையான கதையைப் போன்றது.

அப்போது உதயணன் கோசாம்பி நகரை ஆள்வதற்குத் தொடங்கிச் சில நாட்கள் கழிந்திருக்கும். உஞ்சை நகரத்தில் வசித்து வந்த அருஞ்சுகன்’ என்னும் அந்தண இளைஞன் ஒருவன் கோசாம்பி நகரத்தில் இருக்கும் தன் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்துவிட்டு வருதல் வேண்டும்