பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கொண்டிருந்தது அந்த யாழ் ஒலி. உதயணன் கண்களில் மலர்ச்சியும் முகத்தில் மகிழ்ச்சியும் தோன்ற, மீண்டும் அந்த ஒலியைக் கூர்ந்து கேட்டான். சந்தேகமே இல்லை. அது கோடபதியின் ஒலிதான்!’ என்று தன் மனத்திற்குள் உறுதி செய்து கொண்டான். ‘பத்திராபதியில் ஏறி வாசவதத்தையோடு உஞ்சை நகரத்திலிருந்து வரும்போது நடுவழியில் மூங்கிற் புதரில் சிக்கித் தொலைந்துபோன அந்த யாழ் இப்போது இங்கே எப்படி வந்தது? தான் அந்த ஒலியைக் கேட்பது கனவா, நனவா?’ என்று சில கணம் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், எதிர்ப்புறத்துத் தெருவிலுள்ள அந்த வீட்டு மேல்மாடத்திலிருந்து வந்த கோடபதியின் ஒலியானது, அரசே என்னைக் காட்டிலே தவறவிட்டுவிட்டு ஒரேயடியாக மறந்துபோய் விட்டாயே! உன் மனம் எவ்வளவு கடுமையானது?’ என்று அவனை நோக்கிப் பழைய சம்பவத்தை நினைவூட்டி இரக்கப்பட்டுக் கொள்வது போல இருந்தது.

உதயணனுக்கு அந்த இசை செவியில் பாயப்பாய, மனம் நெகிழ்ந்தது. கோடபதியின் தெய்வீகத் தன்மை அவன் நினைவிலே படர்ந்து அவனை ஏங்க வைத்தது. சட்டென்று ஓர் ஆளை அந்த வீட்டிற்கு அனுப்பி, ‘யார் யாழ் வாசிப்பது? வாசிக்கின்ற யாழ் அவனுக்கு எங்கே அகப்பட்டது?’ என்று விசாரித்து வரச்சொல்ல வேண்டும் என்று கருதி, மேல் மாடத்தின் வாயிலுக்கு வந்து மெய்க்காப்பாளனை அழைத்தான் உதயணன். மெய்க்காப்பாளன், உதயணனுக்கு அருகில் வருவதற்குள் பக்கத்து அறையில் இருந்த வயந்தகன் அவசரமறிந்து விரைந்தோடி வந்தான். வந்து, “என்ன செய்ய வேண்டும்? என்ன நிகழ்ந்தது?” என்று உதயணனைக் கேட்டான். உடனே உதயணன், வயந்தகனை மேல் மாடத்தின் முன்பகுதிக்கு அழைத்துச் சென்று அவனையும் காற்றோடு கலந்துவந்த அந்த யாழிசையைக் கேட்கும்படி செய்தான். வயந்தகனும் அதைக் கேட்டுவிட்டு, “அது கோடபதியின் ஒலிதான்” என்று உறுதியாகக் கூறினான்.