பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இழந்த பொருள்களின் வரவு

311

உதயணன், உடனே அந்த வீட்டிற்குச் சென்று விவரங்களை மேலும் அறிந்துகொண்டு வருமாறு வயந்தகனை அனுப்பினான். வயந்தகன் கீழிறங்கி விரைந்து சென்றான்.

எதிர்ப்புறத்துத் தெருவில் யாழொலி எந்த வீட்டு மேல்மாடத்தில் இருந்து வந்ததோ, அந்த வீட்டிற்குள் செய்தியை அறியும் ஆவலோடு விரைந்து நுழைந்தான் வயந்தகன். கீழே இருந்த சிலரை விசாரித்ததில், யாழ் வாசிப்பவன் உஞ்சை நகரத்தைச் சேர்ந்த ஒர் அந்தண இளைஞன்தான் என்றும், அவன் அங்கே தன் நண்பர் வீட்டுக்கு அப்போதுதான் புதிதாக வந்துள்ளான் என்றும், வந்து இரண்டோர் நாள்களே ஆகின்றன என்றும், அவன் நன்றாக யாழ் வாசிப்பான் என்றும் விவரங்கள் தெரியவந்தன. இவற்றைத் தெரிந்து கொண்ட பின்னர், மேல்மாடத்தை அடைந்து அந்த இளைஞனைச் சந்தித்துப் பேசும் கருத்துடன் வயந்தகன் ஆவலோடு சென்றான். திடும் என்று யாரும் எதிர்பாராத விதமாக வயந்தகன் உள்ளே நுழையவே, அருஞ்சுகன் யாழ் வாசித்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டான். வயந்தகனை ஏற்கெனவே அறிந்து கொண்டிருந்த மற்றவர்கள், அவனுக்கு வணக்கம் செலுத்தும் பாவனையில் எழுந்து நின்று வரவேற்றனர். வயந்தகன் நேரே யாழோடு வீற்றிருந்த அருஞ்சுகனின் அருகிற் சென்று அமர்ந்தான். “அன்பு கூர்ந்து இந்த யாழ் தங்களுக்குக் கிடைத்த வரலாற்றை எனக்குச் சிறிது விளக்க வேண்டும்! அதை நானும் அறிந்துகொள்ளலாம் அல்லவா?” என்று வயந்தகன் கேட்டவுடனே அருஞ்சுகன் மறுக்காமல், தான் கோடபதியைப் பெற்ற விவரத்தைக் கூறலானான்.

“இரண்டோர் நாள்களுக்கு முன்னால், உஞ்சையிலிருந்து நடையாக நடந்து கோசாம்பி நகருக்குப் பயணம் வரும் போது, வழியில் நருமதை நதிக்கு இப்பால், ஒரு பெரிய மலையடிவாரத்தில் மூங்கிற் புதர் ஒன்றில் சிக்கியிருந்த இந்த யாழை நான் கண்டேன். நீர் பருகவந்த யானைகளால் துன்புற நேருமே என்றஞ்சி நான் வேங்கை மரத்தில் ஏறியபோது,