பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

காற்றிலே மூங்கிற் புதரிலிருந்து இந்த யாழ் ஒலித்தது. இதன் ஒலி கேட்டு யானைகள் விலகிச் சென்றன. நான் இறங்கி இந்த யாழை எடுத்துக்கொண்டு வந்தேன்” என்று அருஞ்சுகன் யாவற்றையும் கூறவே, வயந்தகன் அந்த யாழை உதயணனுடைய கோடபதி என்பதையும் பத்திராபதியில் வரும் போது அது மூங்கிற்புதரில் சிக்கிக் கொண்டதையும் சொல்லி, அவனை யாழுடனே உதயணனிடம் அழைத்துச் சென்றான்.

காட்டில் கிடைத்த அந்த யாழால் உதயணனைச் சந்திக்கும் வாய்ப்பு வந்ததே என்ற மகிழ்ச்சியோடு வயந்தகனைப் பின்பற்றி அரண்மனை சென்றான் அருஞ்சுகன். இருவரும் அரண்மனை மேல்மாடத்தில் ஏறி நுழைந்ததும், அருஞ்சுகன் கையில் கோடபதியைக் கண்ட உதயணன், அவனை அன்போடு வணங்கி வரவேற்றான். அருஞ்சுகன் மீண்டும் தனக்கு அது கிடைத்த வரலாற்றைக் கூறிவிட்டு, அதனைப் பயபக்தியோடு உதயணன் கரங்களில் அளித்தான். “வருக என் கோடபதியே! நீதான் வத்தவனுக்கு, அமுதம்” என்று யாழை வரவேற்பவன் போலக் கூறிக்கொண்டே, அதைப் பெற்றுக்கொண்டான் உதயணன். பின்பு வெகுநேரம் அவன் அருஞ்சுகனோடு அமர்ந்து, யாழிசையையும் கலைகளையும் பற்றி ஆர்வத்தோடு அளவளாவிக் கொண்டிருந்தான். கோடபதியைக் கொண்டுவந்து கொடுத்தவன் என்ற முறையில் அருஞ்சுகனின்மேல் உதயணனுக்கு அளவற்ற அபிமானம் ஏற்பட்டிருந்தது. இறுதியில், அருஞ்சுகனுக்குப் பல பரிசில்களை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு வழங்கி மகிழ்ந்தான் உதயணன். பரிசில்களை மட்டுமின்றித் தன் நாட்டைச் சேர்ந்த சிறப்பான ஊர் ஒன்றையும் அவனுக்கு அளித்து உவந்தான். “அருஞ்சுக! நீ திரும்பவும் உஞ்சை நகருக்குச் செல்ல வேண்டாம். இங்கேயே கோசாம்பியில் நீ வசித்து வருதல் வேண்டும் என்பது என் விருப்பம். என் அரசவைக் கலைஞனாக நீ இங்கேயே இருந்தாக வேண்டும்” என்று உதயணன் வேண்டிக் கொண்டபோது அருஞ்சுகனும் வேண்டுகோளுக்கு உடன்பட்டு அங்கேயே, கோசாம்பியில்