பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

செய்வதற்கு அவன் மேற்கொண்ட முயற்சிகள் பல. ஆருணியை வெல்லும் முயற்சியை மேற்கொண்டு புறப்படும் அந்த வேளையிலும் மறவாமல் ‘நீங்கள் எவ்வாறேனும் உருமண்ணுவாவை விடுதலை செய்து அனுப்ப வேண்டும்’ என்று உதயணன் உள்ளமுருக வேண்டிக் கொண்டதனால், தருசகனுக்கு அதனை மறுக்க முடியவில்லை. ஆகையால்தான், எப்படியும் உருமண்ணுவாவை விடுதலை செய்ய ஏற்பாடு செய்வதாகத் துணிந்து உதயணனிடம் அன்று வாக்களித்துவிட்டான் அவன்.

உதயணன், வருடகாரன் முதலியவர்களுடனே புறப்பட்டுக் கோசாம்பிக்குச் சென்றபின், தனியாகச் சிந்தித்துப் பார்க்கும்போதுதான், ‘உருமண்ணுவாவைச் சங்கமன்னர்களிடமிருந்து விடுவிப்பது அவ்வளவு எளிதாக முடிந்துவிடக் கூடிய காரியமில்லையே’ என்பது தருசகனுக்குப் புலப்பட்டது. எனவே அதற்கான முயற்சியில் நுட்பமான ஆழ்ந்த சிந்தனைகளுக்குப் பின் செயலாற்றுவதற்குத் திட்டமிட்டான் அவன். இறுதியில் ஓர் அருமையான வழி உருமண்ணுவாவை விடுதலை செய்வதற்கு ஏற்றதாகக் கிட்டியது. படையெடுத்து வந்து தோற்றுப்போய் ஓடிவிட்ட சங்க மன்னர்களைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானவர் சிலரும் உடைமைகளிற் சிலவும் இராசகிரிய நகரத்துச் சிறையில் இருந்ததுதான் அந்த வழி. இங்கிருக்கும் இந்த உடைமைகளையும் இவர்களையும் விட்டு விடுவதாக ஆசைகாட்டி விடுதலை செய்துவிட்டால், உருமண்ணுவாவைப் பதிலுக்கு விடுதலை செய்யுமாறு அவர்களைக் கேட்கலாம் என்பது தருசகனுக்கு தோன்றிய திட்டம்.

எலிச்செவி அரசனுடைய தம்பியாகிய சித்திராங்கதன் முதலிய சில முக்கியமானவர்கள் தருசகன் வசம் சிறைப்பட்டுக் கிடந்ததால், தன்னிடம் இருக்கும் அந்தப் பிடிப்பை வைத்துக்கொண்டு எதிரிகளிடமிருக்கும் உருமண்ணுவாவை விடுதலை அடையச் செய்துவிடலாம் என்பதே அவனது நம்பிக்கை. ‘எதிரிகள் தனது நம்பிக்கை நிறைவேற்றுவதற்கு