பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இழந்த பொருள்களின் வரவு

315

ஏற்ற நிலையில் இருக்கின்றார்களா? அல்லது அழுத்தமான பிடிவாதத்தோடு இருந்து வருகிறார்களா?’ என்று மெல்ல அறிந்து வருவதற்காகத் திறமையும் நுணுக்கமும் வாய்ந்த சில தூதுவர்களைச் சங்க மன்னர்களிடம் அனுப்பினான் தருசகன். தூதுவர்கள் சென்றனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாகச் சங்க மன்னர்கள் மகிழ்ச்சியோடும் மரியாதையோடும் அவர்களை வரவேற்றனர். இழிந்தவர்களோடு கூடி இன்பம் நுகர்வதிலும் உயர்ந்தவர்களோடு பகைகொள்வதே நல்லது என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டவர்கள்போல் நடந்து கொண்டனர் சங்க மன்னர்கள்.

தருசகனிடமிருந்து சென்றிருந்த தூதுவர்கள் தாமாகப் போய் அங்கு எல்லா விவரங்களையும் கூறுவதற்கு முன்பே, அவர்களாகவே உருமண்ணுவவைச் சிறையிலிருந்து விடுதலை செய்து கொணர்ந்து அழைத்துக் கொண்டு போகுமாறு வேண்டினர். சென்றிருந்த தூதுவர் திகைத்தனர். சங்க மன்னர்களுடைய பண்பாட்டில் அவர்கள் மதிப்பிற்குரிய தன்மையைக் கண்டனர். உருமண்ணுவாவும் தூதுவர்களும் சங்க மன்னர்க்குத் தங்கள் உள்ளமர்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விரைவில் தங்களிடத்தில் சிறைப்பட்டிருக்கும் எலிச்செவியரசனின் தம்பி முதலியோரை விடுவித்து அனுப்பிவிடுவதாகக் கூறிவிடை பெற்றுக் கொண்டு சென்றனர். இராசகிரிய நகரத்திற்கு வந்ததும் உருமண்ணுவா தருசக வேந்தனைச் சந்தித்துச் சங்கமன்னர்கள் தன்னிடமும் மகத நாட்டுத் தூதுவர்களிடமும் பண்புடனே நடந்துகொண்ட முறையைப் பாராட்டிக் கூறிச் சித்திராங்கதன் முதலியோரை உடனே விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டான்.

தருசகனும் சங்க மன்னர்களின் பண்பையும் நல்லியல்பையும் பாராட்டி உடனே சித்திராங்கதன் முதலியோரை விடுதலையாகச் செய்தான். அதுவரை சிறை வாழ்வைப் பொறுத்துக்கொள்ள நேர்ந்தமைக்காக வருத்தந் தெரிவித்துக்கொண்டு அவர்களுக்கு விடை கொடுத்து