பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அனுப்பினர் தருசகனும் உருமண்ணுவாவும். அவர்கள் சென்றபின் உதயணனைப் பற்றிய சகல விவரங்களையும் தருசக வேந்தனிடம் கேட்டு அறிந்துகொண்டான் உருமண்ணுவா. கோசாம்பியை ஆருணியிடமிருந்து மீட்டாயிற்று என்ற செய்தி அவனுக்குப் பேருவகை தந்தது. எல்லா வகையிலும் தன் தலைவனான உதயணனுக்குத் தருசகராசன் மிகுந்த உதவி செய்துள்ளமையைப் புகழ்ந்து கூறி நன்றி செலுத்திவிட்டு, அங்கேயே சிறிதுகாலம் உருமண்ணுவா தங்கியிருந்தான்.

இந்த நிலையில் வாசவதத்தையோடு மறைந்து வசித்து வந்த யூகி, சாதகன் என்னும் குயவனை உருமண்ணுவாவிடம் தூது அனுப்பியிருந்தான். உஞ்சை நகரத்திலிருந்து உதயணன் மீண்டு வருவதற்காக அன்று யூகி செய்த சூழ்ச்சிகளுக்குத் துணையாக இருந்தவனாகிய இந்தச் சாதகன், யூகி உஞ்சை நகரிலிருந்து திரும்பும் போதுதானும் திரும்பி வந்து, யூகிக்கு உதவியாக இருந்து வந்தான். அடிக்கடி யூகி, உருமண்ணுவாவிற்குக் கூறியனுப்பும் சூழ்ச்சித் திட்டங்களின் விவரத்தை அவனே கூறுவதற்குப் புறப்படுவது வழக்கம்.

சங்க மன்னர்களிடமிருந்து விடுதலை அடைந்து இராசகிரிய நகரத்தில் தருசக மன்னனின் அரண்மனையில் உருமண்ணுவா தங்கியிருக்கிறான் என்பதை நன்கு தெளிவாக அறிந்துகொண்ட பின்பே யூகி, சாதகனைத் திருமுகத்துடனே இராசகிரிய நகரத்துக்கு அனுப்பியிருந்தான். இரண்டாவது முறையாகத் தானும், தத்தையும் இறந்துவிட்டதாக உதயணனை நம்பச் செய்தபின் அவன் நன்மையைக் குறிக் கொண்டு, தான் செய்த ஒவ்வோர் சூழ்ச்சியையும் நடத்துவதற்கு உருமண்ணுவாவைத்தான் யூகி முற்றிலும் பொறுப்பாக நம்பியிருந்தான். ‘இப்போது உதயணன் கோசாம்பி நகரத்து ஆட்சியை மீட்டுக்கொண்டு வாழ்விலே தனது அரசியல் பொறுப்பை உணர்ந்தவனாகப் பதுமையோடு அமைதியான முறையிலே வாழ்ந்து வருகிறான்’ என்பதைக் கேள்வியுற்றுத் ‘தன் திட்டங்களும் சூழ்ச்சிகளும் அநேகமாக