பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மதுகாம்பீர வனம்

321

சாதகன் ஆகிய இருவருக்கும் கண்களில் நீர் துளித்துவிட்டது. அந்தக் காட்சி அவர்களை மனம் உருக்கிற்று.

61. மதுகாம்பீர வனம்

லநாள் பிரிந்திருந்து இப்போது முதன் முறையாகச் சந்தித்த பின்னர் யூகி, உருமண்ணுவா இருவரும் கூடிச் சிந்தித்துத் தாங்கள் எல்லோரும் உடனே கோசாம்பி நகரத்துக்குப் புறப்படுவது என முடிவு செய்தனர். ‘சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று தானும் வாசவதத்தையும் உதயணனுக்கு முன் தோன்றினால், அவன் ஏதேதோ நினைத்து மனங்குழம்பும்படி ஆகிவிடும்’ என்று உருமண்ணுவாவிடம் யூகி கூறி, அவனது கருத்து யாது எனவும் வினாவினான். ‘அவ்வாறு செய்வது பொருத்தம் அல்ல’ என்பதே தன் கருத்து என்றும், ‘மெல்ல மெல்லவே அதை உதயணன் அறியும்படி செய்ய வேண்டும்’ என்றும், ‘அவன் யாவற்றையும் ஒருவாறு தெளிந்து கொண்ட பின்பே வாசவதத்தையை அவன் முன்னால் நிறுத்த வேண்டும்’ என்றும் யூகிக்கு உருமண்ணுவா மறுமொழி கூறினான். கோசாம்பி நகரின் ஊரெல்லையில் மதுகாம்பீர வனம் என்ற ஒர் அழகான பெரிய சோலை உண்டு. அந்தச் சோலைக்கு நடுவில், நகருக்கு விருந்தினராக வரும் அரசர்கள் தங்குவதற்கென்றே எழில்மிக்க விருந்தினர் மாளிகை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. கோசாம்பி நகரத்திலுள்ள அழகான அம்சங்களில் எல்லாம் கண்டோர் மனத்தைப் பிணிக்கும் பேரழகு வாய்ந்த அம்சம், இந்த மதுகாம்பீர வனமும் இதனுள் இருக்கும் விருந்தினர் மாளிகையும்தான். எத்தனை கோடி முறை கண்குளிரக் கண்டாலும் தெவிட்டாதது இதன் வனப்பு. இந்தச் சோலையையும் மாளிகையையும் காத்துவரும் அரண்மனைக் காவலர்களை உருமண்ணுவாவுக்கு நன்கு தெரியும்.

அப்போது சோலையில் உள்ள மாளிகையில் வேற்று நாடுகளிலிருந்து எந்த அரசரும் வந்து விருந்தினராகத் தங்கி

வெ.மு- 21