பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

யிருக்கவில்லை என்பதையும் உருமண்ணுவா நன்கு அறிந்திருந்தான். எனவே, புண்டர நகரத்திலிருந்து யூகி, தத்தை, சாங்கியத்தாய் முதலியவர்களோடு புறப்பட்டுக் கோசாம்பி நகருக்கு வந்த உருமண்ணுவா, நகரஎல்லையை அடைந்ததும் நேரே இந்தச் சோலைக்குள்ளேயே நுழைந்தான். சோலைக் காவலர்கள் உருமண்ணுவாவை வணங்கி வரவேற்றார்கள். உருமண்ணுவா அவர்களைத் தனியே அழைத்து எல்லா விவரத்தையும் கூறித் தாங்கள் அங்கே தங்கியிருப்பதோ, தங்களைப் பற்றிய மற்ற இரகசியங்களோ யாருக்கும் தெரியக் கூடாது என்றும் தெரியும்படி அவர்களும் பேசலாகாது என்றும் கூறிவிட்டு, யூகி முதலியவர்களை மாளிகையில் மறைவாகத் தங்கச் செய்தான். பின்பு தான் மட்டும் தனியே அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றான். உருமண்ணுவா, வரும் செய்தியைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியடைந்து, அச்செய்தியைக் கொண்டுவந்த காவலனிடம் உடனே அவனை அழைத்து வருமாறு அனுப்பினான் உதயணன்.

தனக்கு வாக்களித்தபடியே உருமண்ணுவாவை விடுதலை செய்து அனுப்பிய தருசகனின் பெருந்தகைமையை தன் மனத்திற்குள்ளே எண்ணிப் பாராட்டிக் கொண்டான் உதயணன். அவன் அவ்வாறு எண்ணிக் கொண்டே இருக்கும்போது உருமண்ணுவா உள்ளே நுழைந்தான். உதயணன் ஆறாத மகிழ்ச்சியோடு அவனைத் தழுவிக்கொண்டு இனிய மொழிகளால் வரவேற்றான். சங்க மன்னர்களிடம் சிறைப்பட்ட பின்பு நடந்த நிகழ்ச்சிகளைக் கூறும்படி, உதயணன் கேட்டுக் கொள்ளவே, உதயணனுக்கு அவற்றை விவரித்துக் கூறலானான் உருமண்ணுவா. தருசகனுடைய துதுவர்கள் சங்க மன்னர்களிடம் வந்தது தொடங்கி, அவர்கள் பண்புடனே நடந்துகொண்டு தன்னை விடுவித்து அனுப்பியதுவரை உருமண்ணுவா யாவற்றையும் கூறி முடித்தான். சாதகன் தன்னிடத்தில் வந்து யூகியின் திருமுகத்தைக் கொடுத்தது, தான் புண்டர நகரம் சென்று யூகி முதலியவர்களை அழைத்துக்கொண்டு வந்து மதுகாம்பீர வனத்திலே தங்க வைத்திருப்பது முதலிய செய்திகளை