பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

போவதையும் குறிப்பிடுகின்றன. நீ கண்ட கனவின் பொருள் இதுதான்” என்றுகூறி விளக்கினார் முனிவர். இச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் பூரிப்புக் கொண்ட மனநிலையோடும் அந்த முனிவரிடம் விடைபெற்றுக்கொண்டு அரண்மனை திரும்பினான் உதயணன்.

அவன் அரண்மனை திரும்பிய சிறிது நேரங்கழித்துத் தான் உருமண்ணுவா அவனைச் சந்தித்தது நிகழ்ந்தது. எனவே தான் உருமண்ணுவாவைச் சந்திக்கும்போது அவன் சிந்தனைக் குழப்பமின்றி மனமகிழ்ச்சியும் நிறைந்த எண்ணமும் பொருந்திய நிலையிலிருந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவனைச் சந்தித்துவிட்டு வயந்தகனைத் தனியே அழைத்து விவரம் கூறி உதவி நாடினான் உருமண்ணுவா. உடனே வயந்தகன், உதயணனுக்குக் கோடபதி திரும்பக் கிடைத்த வரலாற்றையும், அதனால் அவன் மனம் தத்தையைப் பற்றிய பழைய நினைவுகளில் சிக்கிக் குழம்பியிருப்பதையும் உருமண்ணுவாவுக்கு விவரித்தான். ‘உதயணன் கோடபதியால் வாசவதத்தையைப் பற்றிய நினைவாகவே இருக்கிறான்’ என்பது தன் காரியத்தின் வெற்றிக்கு ஏற்றதாகத் தோன்றவே, வயந்தகனுக்கு உருமண்ணுவா மறைவான திட்டம் ஒன்றைக் கூறி, அதன்படி யாவற்றையும் ஏற்பாடு செய்து நடத்தும்படி உரைத்தான்.

62. நிறைவேறிய நோக்கம்

ருமண்ணுவா தன்னிடம் கூறிய திட்டப்படி செயலாற்றக் கருதிய வயந்தகன், உதயணனைச் சந்தித்து ஒரு கருத்தை அவனிடமிருந்து அறிந்து கொள்வதற்காக மெல்லப் பேச்சு கொடுத்தான். “எந்த நேரமும் மறைந்துபோன தத்தையை எண்ணி எண்ணி வேறு நினைவே இல்லாமல் இப்படி அழுது அரற்றிக் கொண்டிருந்தால் என்ன செய்வது? பதுமை, தத்தை இருவருள் யார்மேல் தங்களுக்கு அதிக அன்பு என்பதும் தெரியவில்லையே?”