பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவேறிய நோக்கம்

331

நீங்கள் இங்கே தங்குவது கூடாது! நாம் விரைவில் மதுகாம்பீர வனத்திற்குத் திரும்பிப் புறப்பட வேண்டும். வாருங்கள் போகலாம்” என்று அழைத்தான். கரையை உடைத்துப் பாயும் நீரைப் போலத் துயரம் பெருகிப் பாய்ந்தது தத்தையின் மனத்தில். கணவனைப் பிரிய வேண்டி நேர்கிறதே என்ற அந்தத் துயரத்தோடு தன் மடியில் சாய்ந்திருந்த உதயணன் தலையை மெல்ல எடுத்து வைத்துவிட்டு எழுந்திருந்தாள். யாழையும் அவனையும் பார்த்தவாறே நீர் துளிக்கும் கண்களோடு வயந்தகனைப் பின்தொடர்ந்து வெளியேறினாள். மதுகாம்பீர வனமடைந்து ஆகியோடும் சாங்கியத்தாயோடும் இருந்தாள்.

வயந்தகனால் வாசவதத்தை மதுகாம்பீர வனத்திற்கு அழைத்துச் செல்லப் பெற்றபின், இங்கே அரண்மனை மேல் மாடத்திலுள்ள பள்ளியறையிலே, ‘வாசவதத்தை தன் பக்கத்திலேயே இருக்கின்றாள்’ என்ற எண்ணத்துடனே உறங்கிக் கொண்டிருந்த உதயணன், இடையே விழித்துக் கொண்டான். விழிப்பு வந்ததும், மஞ்சத்திலே தன் அருகிலே தத்தையைத் தேடின. அவன் கண்கள், ஏமாற்றமடைந்து அவளை அங்கே காணாமற் கனவென்றே திகைத்தன.

மீண்டும் எழுந்திருந்து பள்ளியறை முழுவதும் நன்றாகத் தேடிப் பார்த்தான். தத்தை அங்கே இல்லை என்பது உறுதி யானவுடன், அவன் மனம் துயரத்தினால் மிக்க வேதனை யடைந்தது. பெறுவதற்கரிய மாணிக்கம் ஒன்றைப் பெற்றவன் தவறுதலாக அதனை நீர் நிறைந்த ஆழமான மடு ஒன்றில் இட்டுவிட்டாற்போன்ற நிலையை எய்தினான் உதயணன். அந்தத் துயரம் முற்றிய மனநிலையால் அழுது கதறுதலைப் போலப் புலம்பத் தொடங்கிவிட்டான் அவன். அந்நிலையில் தத்தையை மதுகாம்பீர வனத்தில் கொண்டு போய் விட்டுவிட்டுத் திரும்பிய வயத்தகன், உதயணனுக்கு ஆறுதல் கூற வருவான்போல் அங்கே வந்தான்.

“இரவும் பகலும் இவ்வாறு வாசவதத்தை ‘வாசவதத்தை’ என்று அவளையே நினைத்து இரங்குதல் தங்களைப்